நெல்லூரில் 6 வயது சிறுவனுக்கு ஜிகா வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸ் நோய் (ZVD) என்பது ஏடிஸ் கொசுக்களால் பரவும் நோயாகும். இந்த கொசு டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் ஆகிய மூன்று நோய்களை பரப்புகிறது. ஒருவேளை இந்தத் தொற்று கர்ப்பிணி பெண்களுக்கு இருந்தால், வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் பரவுமாம். இந்த கொசுக்கள் பகலில் கடிக்கக்கூடியவை. அதேபோல ரத்த பரிமாற்றங்களின் வழியாகவும் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவருக்கு பரவும்.
ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் வெளியில் தெரிவதே இல்லை. சொல்லப்போனால் பாதிக்கப்பட்ட 5 பேரில் ஒருவருக்கு மட்டுமே அறிகுறிகள் வெளிப்படுகின்றன. அதாவது காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, கண்கள் சிவந்து போதல், சருமத்தில் சிவப்பு நிறத் தடிப்புகள் அரிப்புடன் தோன்றும்.
இந்நிலையில்தான், இந்த ஜிகா வைரஸின் பாதிப்பால் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் மர்ரிபாடு மண்டலம் வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது அச்சிறுவன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும்,தொற்றை உறுதி செய்ய சிறுவனின் ரத்த மாதிரிகள் மகாராஷ்டிராவில் உள்ள புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவனின் குடும்பம் மற்றும் கிராம மக்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யவும் அமைச்சர் ராமநாராயண ரெட்டி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.