eye drops freepik
ஹெல்த்

10 வகை கண் சொட்டு மருந்துகளை திரும்பப் பெறும் சன் பார்மா! ஏன் தெரியுமா?

மாசுபாடு சந்தேகத்தில் 10 கண் சொட்டு மருந்துகளை திரும்பப் பெறும் சன் பார்மா; நோயாளிகள் மருத்துவர் ஆலோசனை இன்றி சிகிச்சை மாற்ற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

PT WEB

இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான சன் பார்மா, மாசுபாடு சந்தேகத்தின் காரணமாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 10 வகை கண் சொட்டு மருந்துகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரும்பப் பெறுகிறது.

செய்தியாளர் - M.மீரா

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பார்மா, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் 10 வகையான கண் சொட்டு மருந்துகளின் விநியோகத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி, அவற்றைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மருந்துகளில் மாசுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநியோகஸ்தர்களுக்கு அனுப்பப்பட்ட தகவலில், திரும்பப் பெறப்பட்ட மருந்துகளின் விற்பனையை உடனடியாக நிறுத்தவும், கையிருப்பில் உள்ள மருந்துகளை நிறுவனத்திடம் திருப்பி அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரும்பப் பெறப்பட்ட மருந்துகளில் டிபோப்ரெட், பிரினோலார், பிரின்சோடிம், லோட்டெப்ரெட், நேபாலேக்ட், டோபா-எஃப் உள்ளிட்ட கண் சொட்டு மருந்துகள் இடம்பெற்றுள்ளன. இவை கண் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சை, குளுகோமா, கண் தொற்று, ஒவ்வாமை மற்றும் கண் அழற்சி போன்ற பாதிப்புகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

eye drops

இதற்கிடையே, இந்த மருந்துகளைப் பயன்படுத்தி வரும் நோயாளிகள் மருத்துவர் ஆலோசனையின்றி சிகிச்சையை திடீரென நிறுத்தவோ அல்லது தொடர்ந்து பயன்படுத்தவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக கண் மருத்துவரை அணுகி, தேவையான மாற்று மருந்து குறித்து ஆலோசனை பெற வேண்டும்.

நோயாளிகளின் பாதுகாப்பே முதன்மை எனத் தெரிவித்துள்ள சன் பார்மா, மருந்துகள் மீண்டும் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளது.