திடீரென பல்வலி ஏற்படும்போது, மருத்துவரை பார்ப்பதற்கு முன்பு, தற்காலிக நிவாரணம் பெற நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முதலில் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் உப்பு கலந்து, வாயில் ஊற்றி மெதுவாக கொப்பளித்து துப்பவும். இது அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். வலியுடன் வீக்கமும் இருந்தால், ஒரு ஐஸ் கட்டியைத் துணியில் சுற்றி, கன்னத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கவும். இது வலியைக் குறைக்கவும், வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும். பற்களுக்கு இடையில் உணவுத்துகள்கள் மாட்டிக்கொண்டு வலி ஏற்படுவதாகச் சந்தேகித்தால், மெதுவாக பல்நூலை பயன்படுத்தி அவற்றை அகற்றலாம்.
ஈறுகளைப் பாதிக்காதவாறு மிகவும் கவனமாகக் கையாளவும். மருத்துவரின் அறிவுறுத்தல்படி அல்லது மருந்துக் கையேட்டில் உள்ள அளவின்படி பாராசிட்டமால் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். மென்மையான உணவுகளை மட்டுமே உட்கொள்ளவும், வலியிருக்கும் பகுதிக்கு மறுபக்கம் உள்ள பற்களால் மெல்லவும். இந்த வீட்டு வைத்தியங்கள் வலியை தற்காலிகமாக மட்டுமே குறைக்குமே தவிர மூல காரணத்தை குணப்படுத்தாது என்பதால், வலி நின்றாலும் அல்லது தொடர்ந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.