ஹெல்த்

போதைக்கு அடிமையா? விடுபடுவது எப்படி?

போதைக்கு அடிமையா? விடுபடுவது எப்படி?

Sinekadhara
எங்கு திரும்பினாலும் ’’கொரோனா கொரோனா... வீட்டிற்குள்ளேயே இருங்கள் பாதுகாப்பாக இருங்கள்’’ என்பதுதான் தினமும் நம் காதில் விழுகிறது. பலருக்கும் வீட்டிற்குள்ளேயே இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் பலர் மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகி இருக்கின்றனர் என்பதே உண்மை. குறிப்பாக போதை வஸ்துக்களுக்கும் மதுவுக்கும் அடிமையான பலர் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். Subatance abuse disorder என்று சொல்லப்படுகிற இதுபோன்ற அடிமைத்தனம் மற்றும் உளைச்சல் எதனால் ஏற்படுகிறது என்பதை விளக்குகிறார் உளவியல் வல்லுநர் நப்பின்னை சேரன்.

ஆனால் போதைப் பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் மன உளைச்சல், பதட்டம், எரிச்சல், கோபம், எந்த செயலிலும் நாட்டமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவார்கள்.  இதுதான் Subatance abuse disorder  என்று சொல்லப்படுகிற மனநல சம்பந்தப்பட்ட பிரச்னை. அதேசமயம் சிலர் இனி கிடைக்காது என்ற மனநிலைக்கு வரும்போது அதற்கான தேடலை விட்டுவிடுவார்கள்.

ஆரம்பத்தில் உடல் மன ரீதியாக பிரச்னைகள் ஏற்பட்டாலும் நாட்கள் போக போக உடல் ரீதியாக உபாதைகளிலிருந்து விடுபட ஆரம்பிப்பார்கள். மன ரீதியாக உபாதைகளும் ஓரளவு குறையும். இந்த காலகட்டம் மறு புணரமைப்பு (detoxificaiton) பெற வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. மது அல்லது போதைப் பொருட்களை தேடுவதற்கு மேனியா என்று சொல்லப்படுகிற மன எழுச்சி அல்லது கவலை ஒரு காரணமாக இருக்கலாம். ஓரளவு விடுபட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அவர்கள் பிரச்னைக்கான காரணிகளைக் கண்டறிந்து உளவியல் ரீதியான உதவிகளை செய்தால் அவர்களை நிரந்தரமாக விடுவிக்கலாம்.
 
அதிகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தவர்களுக்கு கிடைக்காமல் போனதால் மனச் சிதைவு நோய் வரலாம். அவர்கள் கட்டாயம் மனநல மருத்துவரை அணுகவேண்டும். சிலர் கோயில், யோகா என அழைத்துச் செல்வார்கள். மன அழுத்தத்திற்கு வேண்டுமானால் அது பயனுள்ளதாக இருக்கும். இரண்டு விதமான மனநோய்கள் இருக்கின்றன. ஒன்று தன்னிலை தெரியாதவர்களை சைகோசிஸ் என்று சொல்லுவர். மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்னை உள்ளவர்கள் நியுரோஸ் வகையில் அடங்குவர். இவர்களுக்கு யோகா, தியானம் போன்றவை உதவி செய்யும்.
மன சிதைவு நோய் போன்ற சைக்காடிக் டிஸார்டர் உள்ளவர்கள் கட்டாயம் மன நல மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்து மாத்திரைகள் உட்கொள்ளவேண்டும். மேலும் போதைப் பொருட்களை எடுப்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கும் சரியான ஆலோசனைகள் வழங்குவதே முழுமையான தீர்வாக அமையும்.

போதைப் பொருட்களைத் தேடுவதற்கு அடிப்படை காரணம் என்ன?

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள்ளேயே இருந்து இருந்து குடும்பத்தில் உருவான பிரச்னைகள்கூட போதைப் பொருட்களைத் தேடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் என்ன? அதற்கு உளவியல் ரீதியான தீர்வுகள் என்ன என்பதையே பார்க்கவேண்டும்.

Social Drinking என்பது எப்போதாவது பார்ட்டி அல்லது கொண்டாட்டங்களில் ஜாலிக்காக குடிப்பது. Habitual Drinking என்பது முதலில் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்து அதுவே பழக்கமாகி தினமும் இரவு பகல் பாராமல் குடிப்பது. இதில் போகப்போக குடியின் அளவும் அதிகரித்துக்கொண்டே போகும். இதிலேயே Binge Drinkers என்று சொல்லக்கூடிய மற்றொரு வகையும் உண்டு. அவர்கள் ஒரு வாரம் அல்லது குறிப்பிட்ட நாட்களுக்கு காலையிலிருந்து இரவு வரை குடித்துக்கொண்டே இருப்பார்கள். திடீரென ஒரு நாள் முடிவு செய்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மதுவைத் தொடமாட்டார்கள்.

எப்படிக் கட்டுப்படுத்துவது?

போதைக்கு அடிமையாதல் என்ற நிலை வந்துவிட்டாலே கட்டுப்படுத்துதல் என்ற நிலை சுயமாக வராது. நானே நிறுத்துவிடுவேன் என்று சொல்வது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதோடு உடன் இருப்பவர்களையும் ஏமாற்றிக் கொள்வதாகும். மிகவும் சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்கும் 2லிருந்து 3 சதவீதம் பேரால் மட்டுமே அதுபோல் இருக்கமுடியும்.


குடும்பத்தில் இருப்பவர்கள் முதலாவது அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர்களின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துச்சொல்லி புரியவைக்க வேண்டும். இது தவிர, மனக் கிளர்ச்சி நோய் அல்லது மனச் சிதைவு நோய் இருப்பவர்கள் கட்டாயம் மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது. ஒருமுறை மருந்து எடுக்க ஆரம்பித்தால் அதை ஆயுளுக்கும் தொடர்ந்து எடுக்கவேண்டும் என்ற தவறான கருத்து சிலருக்கு உண்டு. ஆனால் அது உண்மையில்லை.


மனநலம் பற்றிய விழிப்புணர்வு முதலாவது அவசியம். விளையாட்டாக போதைப் பொருட்களை எடுத்துக்கொள்கிறேன் என்பது உண்மையில்லை. போதை என்பதே ஒரு மனநோய். அதிலிருந்து வெளிவர குடும்பத்தின் துணையோடு மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.