ஆய்வின் முடிவு முகநூல்
ஹெல்த்

ஒவ்வொரு சிகரெட் புகைக்கும்போதும்... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ஒவ்வொரு சிகரெட்டை புகைக்கும்போது சராசரியாக ஒரு ஆண் தன் வாழ்நாளில் 17 நிமிடங்களையும் ஒரு பெண் 22 நிமிடங்களையும் இழப்பதாக லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

புகைப்பிடித்தல் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், கூடாது என்றும், பல விளம்பரங்களிலும், திரைப்படங்களிலும் பார்க்க , படிக்க நேர்ந்தாலும் புகைப்பிடிப்பதை நிறுத்துகிறார்களா? என்றால் மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

ஆண்டுதோறும் எத்தனை ஆய்வுகளின் அதிர்ச்சி முடிவுகள் வந்தாலும் பத்தோடு பதினொன்றாகத்தான் இதனை கடந்து விடுகின்றனர் பலர். இந்தவகையில், லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய புகைப்பிடித்தல் ஆய்வில் இதுத்தொடர்பான அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

அதில், ஒவ்வொரு சிகரெட்டை புகைக்கும்போது சராசரியாக ஒரு ஆண் தன் வாழ்நாளில் 17 நிமிடங்களையும் ஒரு பெண் 22 நிமிடங்களையும் இழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடிக்காதவர்களின் வாழ்நாளோடு புகைப்பிடிப்பவர்களின் வாழ்நாள்களை ஒப்பிடுகையில், சுமார் 10 -11 ஆண்டுகள் ஆயுட்காலம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 10 சிகரெட்டுகளை புகைப்பவர்கள், ஒரு வாரம் மட்டும் விட்டுவிடுவதன் மூலம் ஒரு நாளை இழப்பதைத் தடுக்கலாம் என்றும், எட்டு மாதங்களுக்குத் தவிர்ப்பதன் மூலம் ஒரு மாத ஆயுளைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடிப்பவர்களிடையே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பேர் புகைப்பிடித்தல் தொடர்பான நோயினால் இறந்துள்ளனர். இங்கிலாந்தில் மட்டும் புகைப்பிடித்தல் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 80,000 பேர் இறக்கின்றனர். இங்கிலாந்தில் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் அதிகரித்து வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.