ஹெல்த்

உலக இதய தினம்: காய்கறி, கீரை வகைகளை கொண்டு இதய ஓவியம் வரைந்த பள்ளி மாணவி

webteam

உலக இதய தினத்தை முன்னிட்டு 150 சதுர அடி பரப்பில் காய்கறி, கீரை வகைகளை மட்டும் கொண்டு, இதய வடிவிலான ஓவியமொன்றை வரைந்திருக்கிறார் சேலத்தை சேர்ந்த மாணவியொருவர்.

சேலம் சின்னத்திருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் அபிநயப்ரியா. தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் இவர், உலக இதய தினத்தையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 150 சதுர அடி பரப்பில், சத்து மிகுந்த கீரைகள் காய்கறிகள் பழ வகைகளை கொண்டு இதய வடிவ ஓவியமொன்றை வரைந்திருக்கிறார்.

தூதுவளை, வல்லாரை, முருங்கை, தவசி உள்ளிட்ட 15 வகையான கீரைகள், முருங்கைக்காய், பூசணிக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறி வகைகள் மற்றும் பல்வேறு பழ வகைகளை கொண்ட இதயம் போன்ற அந்த ஓவியத்தை, ஒரு மணி நேரத்தில் வரைந்து முடித்தார் மாணவி அபிநயா. தனது இந்த முயற்சி குறித்து மாணவி பேசுகையில், “தற்போதய சூழலில் பொதுமக்கள் துரித உணவு வகைகளை உட்கொள்வதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனைவரும் நம் பாரம்பரிய உணவு முறையை பின்பற்றி, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக இயற்கை சார்ந்த காய்கறி கீரைகளை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்” என்றார். மாணவியின் இந்த முயற்சியை வெர்ட்ச்யூ புக் ஆஃ ரெக்கார்டு சாதனையாக அங்கீகரித்துள்ளது.