டீயுடன் சேர்த்து சிகரெட் புகைப்பது பல விதமான புற்றுநோய்கள், இதயநோய்கள் உள்ளிட்ட 8 கொடிய நோய்களை ஏற்படுத்தலாம் என ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அலுவலகப் பணிகளுக்கு இடையே டீக்கடைக்குச் சென்று டீயும் அதோடு சேர்ந்து சிகரெட் பிடிப்பதும் பரபரப்பான நகர வாழ்க்கையின் பிரிக்க முடியாத, வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது. இந்த நிலையில், சூடான டீ மனித உடலில் உணர்திறன் கொண்ட உள் திசுக்களை சேதப்படுத்த வாய்புள்ளதாகவும், சிகரெட்டில் புற்றுநோய்க் காரணிகள் இருப்பதாலும் இவை இரண்டும் இணையும்போது மிகத் தீவிரமான ஆபத்தை உடலில் உண்டாக்கும் என Annals of Internal Medicine இதழில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023இல் வெளியான ஆய்வறிக்கை தற்போது மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பாக, டீ + சிகரெட் காம்போ உணவுக்குழாய், நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அபாயத்தை இருமடங்கு அதிகரிக்கிறது; காலப்போக்கில், நாள்பட்ட வீக்கத்தை உணவுக்குழாயில் ஏற்படுத்துவதோடு, நுரையீரலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சூடான டீயின் வெப்பமும் நச்சு ரசாயனம் உள்ள சிகரெட்டின் புகையும் தொண்டையின் திசு சேதத்தை ((tissue damage)) அதிகப்படுத்துகிறது. சிகரெட்டின் புகை பார்மால்டிஹைட், பென்சீன் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை தொண்டைக்குள் திணிக்கிறது. இது தொண்டை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. சிகரெட்டில் உள்ள நிகோடின் இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. டீயில் உள்ள காஃபின் ((caffeine)) இதயத்தை மிகையாக தூண்டுகிறது. இந்த கலவை இதய அமைப்புக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் தமனி சேதம், மாரடைப்பு போன்ற இதயக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகமாகிறது.
டீயுடன் சேர்ந்து சிகரெட் பிடிப்பதால், கருவுறாமை, விந்தணு எண்ணிக்கை பாதிப்பு, ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை அதிகரிக்கிறது. மேலும், செரிமான மண்டலம் பாதிப்படைந்து, அஜீரனம், வயிற்றுப் புண் உண்டாகவும் வழிசெய்கிறது. இதேபோல, சிகரெட் பிடித்தல் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைப்பதால், நினைவாற்றல், அறிவாற்றல் செயல்திறனையும் பாதிக்கிறது. மேலும், தமனிகளைத் தடுத்து பக்கவாதத்தைத் தூண்டும் அபாயமும், டீயுடன் சிகரெட் பிடிக்கும் வழக்கத்தால் ஏற்படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.