ஹெல்த்

உடல் துர்நாற்றமா? நீரிழிவு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்!

Sinekadhara

ஒவ்வொருவருக்கும் இயற்கையிலேயே வித்தியாசமான உடல் வாசனை உண்டு. சருமத்தில் சுரக்கும் வியர்வை மற்றும் பாக்டீரியாக்களால் இதுபோன்ற வாசனை வருகிறது. மேலும், ஹார்மோன்கள், உணவு பழக்கவழக்கங்கள், தொற்றுக்கள், மருந்துகள் மற்றும் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் போன்றவற்றால் அந்த வாசனை துர்நாற்றமாக மாறிவிடும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் வாசனையில் பெரிதளவு மாற்றம் தெரியும். அதற்கு காரணம் ரத்த சர்க்கரை அளவுடன் தொடர்புடைய கீட்டோஅசிடோசிஸ். கீட்டோன் அளவு அதிகரிக்கும்போது, ரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். இதனால் உடல் வாசனை நாற்றமாக வீசும்.

ரத்த சர்க்கரை அளவு 240 mg/dL அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், ஓவர்-தி-கவுண்டர் கீட்டோன் சோதனைக் கருவியைப் பயன்படுத்தி சிறுநீரை சோதனை செய்யவும் அல்லது ரத்தத்தைச் சோதனை மீட்டரைப் பயன்படுத்தி உடலில் கீட்டோன் அளவை பரிசோதிக்கவும். இந்த பரிசோதனையை 4- 6 மணிநேரங்களுக்கு ஒருமுறை செய்யவும். நீரிழிவு கீட்டோஅசிடோசிஸின் ஏதேனும் அறிகுறிகளை தெரிந்தால், கீட்டோன்களை சோதிப்பது அவசியம்.

உயர் ரத்த சர்க்கரை எப்படி துர்நாற்றத்தை உருவாக்குகிறது?

நீரிழிவு நோய் இருக்கும்போது, ரத்த சர்க்கரையை ஆற்றலாகப் பயன்படுத்த செல்களை தூண்ட போதுமான இன்சுலின் உடலில் இருக்காது. எனவே கல்லீரல் கொழுப்பை உடைக்கிறது. இது கீட்டோன்கள் எனப்படும் அமிலங்களை உருவாக்குகிறது. அதிகளவு கீட்டோன்கள் உருவாகும்போது அது ரத்தம் மற்றும் சிறுநீரில் கலந்து, அவற்றை அமிலத்தன்மை மிக்கவையாக மாற்றுகிறது.

கீட்டோன்கள் பொதுவாக சுவாசம் மற்றும் வியர்வை மூலம் உடலை விட்டு வெளியேறுகிறது. இதுதான் உடல் துர்நாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. கட்டுப்படுத்த முடியாத கீட்டோன்கள், மூச்சுவிடும்போது ஒருவித பழ வாசனையை சிலருக்கு உருவாக்குகிறது.

சிலருக்கு வாந்தி அல்லது குடல் அடைப்பு அல்லது உடல் கழிவுகள் போன்ற துர்நாற்றம் மூச்சுவிடும்போது வெளியாகிறது.

இந்த துர்நாற்றத்தை தடுப்பது எப்படி?

துர்நாற்றத்தை கட்டுப்படுத்த சிறந்த வழி ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். நீரிழிவு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது.