செய்தியாளர் - ராஜ்குமார்.ர
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் லியோவுக்கு நுரையீரலில் அடினோகார்சினோமா புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வகை புற்றுநோய் என்றால் என்ன, இது ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன, இதன் அறிகுறிகள் என்ன, எவ்வாறு கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.
நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய்களில் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாக நுரையீரல் அடினோகார்சினோமா உள்ளது. இது நுரையீரலில் உள்ள சுரப்பித் தன்மை கொண்ட செல்களில் உருவாகும் ஒரு வகை புற்றுநோயாகும். பொதுவாக மனிதர்களுக்கு கண்டறியப்படும் நுரையீரல் புற்றுநோய்களில் சுமார் 40 சதவீதம் இந்த வகையைச் சேர்ந்தவை என அமெரிக்க நுரையீரல் புற்றுநோய் அறக்கட்டளை தெரிவிக்கிறது. சில வகை நுரையீரல் புற்றுநோய்களுடன் ஒப்பிடும்போது, இது மெதுவாக வளரக்கூடும் என்பதால், ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
புகை பிடித்தல், நுரையீரல் புற்றுநோய்க்கான முக்கிய ஆபத்துக் காரணியாக உள்ளது. இருப்பினும், புகை பிடிக்காதவர்களுக்கும் இந்தப் புற்றுநோய் ஏற்படலாம். காற்று மாசுபாடு, ரேடான் வாயு, அஸ்பெஸ்டாஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களின் வெளிப்பாடு மற்றும் குடும்பமரபு பின்னணி உள்ளிட்ட காரணிகளும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையவையாக இருக்கலாம்.
இந்த வகை புற்றுநோய்க்கு அறிகுறியாக சில வகைப்படுத்தப்பட்டுள்ளது. நுரையீரல் அடினோகார்சினோமா ஆரம்ப நிலையில் இருக்கும்போது, பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இருக்காது. நோய் வளர்ச்சியடையும்போது, தொடர்ச்சியான இருமல், மூச்சுத் திணறல், மூச்சிரைப்பு, இருமலுடன் ரத்தம் வெளியேறுதல், மார்பு அல்லது முதுகுப் பகுதியில் வலி, காரணமின்றி உடல் எடை குறைதல் மற்றும் அதிகப்படியான சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இருப்பினும், இந்த அறிகுறிகள் அனைத்தும் புற்றுநோயால் மட்டுமே ஏற்படும் என்று கூற முடியாது. இத்தகைய அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
நுரையீரல் அடினோகார்சினோமாவை, மார்பு எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மூலம் நுரையீரலில் கட்டி இருப்பது கண்டறியப்படலாம். புற்றுநோயை உறுதிப்படுத்த திசு மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும், புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது, பிற பகுதிகளுக்குப் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படலாம்.
புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருந்து நுரையீரலின் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இருந்தால், அறுவைசிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றுவது முக்கியமான சிகிச்சை முறையாகும். சில நேரங்களில் நுரையீரலின் ஒரு மடல் முழுவதும் அகற்றப்படலாம். நோயின் நிலையைப் பொறுத்து கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, இலக்கு சிகிச்சை மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சை ஆகியவையும் பயன்படுத்தப்படலாம்.
இந்தச் சிகிச்சை பெறுவது இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்தி விடுமா என்றால் அது புற்றுநோயின் நிலை, கட்டியின் அளவு, நிணநீர் கணுக்கள் பாதிக்கப்பட்டுள்ளனவா, பிற உறுப்புகளுக்குப் பரவியுள்ளதா மற்றும் நோயாளியின் ஒட்டுமொத்த உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து குணமடைவதற்கான வாய்ப்புகள் மாறுபடும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது சிறந்த முடிவுகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
எனவே, நுரையீரல் அடினோகார்சினோமாவைப் பொறுத்தவரை, ஆரம்பகட்டக் கண்டறிதலும் உரிய சிகிச்சையும் முக்கியமானவை. தொடர்ச்சியான இருமல், மூச்சுத் திணறல் மற்றும் காரணமின்றி உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.