ஹெல்த்

சென்னையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு: அரசு மருத்துவமனை மீது பெற்றோர் புகார்

webteam

சென்னை மதுரவாயலில் மர்ம காய்ச்சலால் 13 வயது பள்ளி மாணவி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயிலை சேர்ந்த செந்தில்குமார் - சுஜிதா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகள் பூஜா (13). இவர் விருகம்பாக்கம் அரசு பள்ளியில் 8 வது படித்து வந்திருக்கிறார். கடந்த 3 நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சிறுமி, கேஎம்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையில் சிறுமியின் பெற்றோர் கேட்டnபோது மர்ம காய்ச்சலால் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. மேலும் இதேபோல அந்த பகுதியில் சிலருக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதென்றும் சொல்லப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பைகள் அகற்றுதல்,கொசு மருந்து அடித்தல் , சுண்ணாம்பு தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே தங்கள் மகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அவருக்கு டெங்குவா பன்றி காய்ச்சலா வைரஸ் காய்ச்சலா என கேம்எம்சி மருத்துவமனை உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்பகுதியில் அதேபோல் சிலருக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதால் சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் அப்பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.