இதய மாற்று அறுவை சிகிச்சை
இதய மாற்று அறுவை சிகிச்சை முகநூல்
ஹெல்த்

”எல்லைகள் பிரித்தாலும் தோள் கொடுத்த மனிதநேயம்” - இந்தியரின் இதயத்தால் உயிர்பெற்ற பாகிஸ்தானிய பெண்!

ஜெனிட்டா ரோஸ்லின்

இதய செயலிழப்பால் வருந்திய பாகிஸ்தானிய பெண்ணுக்கு இந்தியரின் இதயம் மூலம் உயிர் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானிய பெண்ணான ஆயிஷா ரஷானுக்கு வயது 19. இதய நோயால் பாதிக்கப்பட்ட ஆயிஷாவிற்கு ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்பதுதான் கனவு. இந்நிலையில், இதய செயலிழப்பு காரணமாக சிகிச்சை மேற்கொள்ள, கடந்த 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ஆயிஷாவும், அவரின் குடும்பத்தினரும் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆயிஷாவின் குடும்பத்தினர் அம்மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் மற்றும் இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் ராவ் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அவரை சோதித்த மருத்துவர்கள் தெரிவிக்கையில், “ இதய செயழிலப்பினை சரிசெய்ய பொறுத்தப்பட்டுள்ள இதய பம்ப் வால்வு ஒன்றில் கசிவு ஏற்பட்டுள்ளது. ஆகவே, கட்டாயம் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு சுமார் 35 லட்சம் செலவாகும்.” என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க இயலாது என்பதை சொல்ல இயலாமல் ஆயிஷாவின் குடும்பத்தினர் தவித்துள்ளனர். இவர்களின் நிலையை அறித்த மருத்துவ குழு இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையாக சுமார் 35 லட்சம் செலவை ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் மூலமாக பெற்றுக்கொடுத்துள்ளது. அதுமட்டுமல்ல, ஆயிஷாவிற்கு தேவையான இதயம் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்த செலவும் இல்லாமல் ஆயிஷாவிற்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை அந்த தனியார் மருத்துவமனை செய்துள்ளது.

இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும் ஆயிஷா மீண்டும் பாகிஸ்தான்செல்ல உள்ளார். ஆகையால், ஆயிஷாவின் தாய் இந்திய அரசாங்கத்திற்கும், அறக்கட்டளைக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ஆயிஷாவின் தாய் சனோபர் தெரிவிக்கையில், “வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், இந்தியாவோடு ஒப்பிடுகையில், பாகிஸ்தானில் நல்ல மருத்துவ வசதிகள் இல்லை. இந்தியா மிகவும் நட்பாக எங்களிடம் இருப்பதை நாங்கள் உணர்கிறோம். மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதிகள் பாகிஸ்தானில் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில்தான் உடனடியாக ​​நாங்கள் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணனை அணுகினோம். எங்களுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கொடுத்துள்ளனர். இதற்காக இந்திய அரசு மற்றும் இந்திய மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.”என்று தெரிவித்துள்ளார்.