ஒற்றைத் தலைவலி 6 முதல் 60 வயதுவரை யாரையும் பாதிக்கக்கூடியது. அடிக்கடி கொட்டாவி, வாந்தி உணர்வு, கடுமையான வலி போன்றவை அறிகுறிகள். மன அழுத்தம், தூக்கமின்மை, வானிலை மாற்றங்கள் காரணமாக இது ஏற்படலாம். மாதத்தில் 4 நாட்களுக்கு மேல் வலி நீடித்தால் மருத்துவரை அணுகுவது அவசியம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உலகளவில் சுமார் 120 கோடி மக்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாடாய்ப்படுத்தும் ஒற்றைத் தலைவலிக்கு என்னதான் தீர்வு?
6 வயதுக் குழந்தைகள் முதல் 60 வயது முதியவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் பாதிக்கக்கூடிய இந்த ஒற்றைத் தலைவலி, எபிசோடிக் மற்றும் குரோனிக் என இருவகைகளாகப் பிரிக்கப்படுகிறது. மாதத்தில் 15 நாட்களுக்கு மேல் வலி நீடித்தால் அது தீவிரமான பாதிப்பாகக் கருதப்படுகிறது.
இது குறித்து விளக்கும் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ரெங்கநாதன் ஜோதி, அடிக்கடி கொட்டாவி வருதல், வாந்தி உணர்வு, தலையின் ஏதேனும் ஒரு பகுதியில் கடுமையான வலி போன்றவை இதன் அறிகுறிகள். மன அழுத்தம், தூக்கமின்மை, மாதவிடாய், வானிலை மாற்றங்களால் இது ஏற்படலாம் என்கிறார்.
மாதத்தில் 4 நாட்களுக்கு மேல் தலைவலி இருப்பவர்கள் சுயமாக மாத்திரை எடுக்காமல், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். முறையான சிகிச்சை மூலம் பாதிப்பைக் குறைக்க முடியுமே தவிர, இதற்கு நிரந்தரத் தீர்வு கிடையாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.