ஹெல்த்

`உரிமையிலேயே பேசினார்’ Vs `என் பொண்ணு மாதிரி’- திமுக மேயர் & அமைச்சர் நேருவின் விளக்கம்!

நிவேதா ஜெகராஜா

அமைச்சர் கே.என்.நேரு தம்மை ஒருமையில் பேசவில்லை, உரிமையில் பேசியதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியாவிடம் கடுமையாக நடந்துகொண்டதாக விமர்சனம் எழுந்தது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மேயர் பிரியா, `சம்பந்தப்பட்ட அந்த நிகழ்ச்சி, சேம்பரில் நடந்தது. பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளிலெல்லாம், அமைச்சர்தான் பேசுவார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் திடீரென என்னை பேச சொன்னார். அதனால் நான் அவரிடம் `நான் பேசட்டுமா’ என்று கேட்டேன். அதற்கு அவர் `நீ பேசு’ என்று பதிலளித்தார். அது ஒரு சதாரண உரையாடல்தான். மற்றபடி அதில் அவர் என்னை மிரட்டவோ அதட்டவோ இல்லை.

எல்லா இடங்களிலும் என்னை மதிக்கக்கூடியவர் அவர். மேயரான நாளில் இருந்து மாநகராட்சி தொடர்பாக எந்தப் பணியை முன்னெடுத்துச் சென்றாலும் மிகுந்த ஆதரவோடு இருப்பார். அந்தவகையில் என்னிடம் உரிமையில் பேசினார் என்றே நினைக்கிறேன், ஒருமையில் பேசியதாக நினைக்கவில்லை' என்று மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் கே.என்.நேருவும், சில ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர், "அந்த நிகழ்ச்சியில் அவரை 'வாம்மா... போம்மா' என்றது மகள் போன்ற அர்த்தத்தில்தான். என்னைவிட வயது குறைந்தவர் அவர். மட்டுமன்றி அவர் என் பொண்ணு மாதிரி. அதனால் அப்படி கூறினேன். மற்றப்படி இவ்விவகாரத்தில், எந்த ஆணாதிக்கத்தனமும் இல்லை. சாதி பாகுபாடும் கிடையாது. அந்த வீடியோவை கட் செய்து பரப்பிக்கொள்பவர்கள் பரப்பிக்கொள்ளட்டும். அதுபற்றியெல்லாம், யோசிக்கமாட்டேன். ஏனென்றால், பிரியா என் பொண்ணு. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை" என்றார்.