ஹெல்த்

டெங்கு, கொரோனா-வை தொடர்ந்து கேரளாவை அச்சுறுத்தும் வெஸ்ட் நைல் நோய்! ஒருவர் மரணம்

நிவேதா ஜெகராஜா

கேரளாவில் வெஸ்ட் நைல் என்கிற புதிய வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.

கேரளாவில் கடந்த சில தினங்களாக வெஸ்ட் நைல் என்ற காய்ச்சல் பரவிவருகிறது. இது கொசுவிலிருந்து பரவுவதாக சொல்லப்படுகிறது. இந்த புதிய காய்ச்சல் துகுறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்து மக்கள் அச்சடைந்துள்ளனர். இந்த நிலையில், வெஸ்ட் நைல் காய்ச்சல் பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த காய்ச்சல் கொசுக்களால் பரவக்கூடிய என்பதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கேரளாவை பொறுத்தவரை, பிற மாநிலங்களைவிடவும் அங்குதான் கொரோனா மிக வேகமாக பரவியது. இதற்கிடையில் தற்போது இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவல் அச்சம் நிலவுவதால், பிற மாநிலங்களை விட கேரளா கூடுதல் கவனத்தோடு இருக்கிறது. குரங்கு அம்மை பரவாமல் இருப்பதற்கு அனைத்து சுகாதார வழிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு சார்பில் அங்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காலமும் துவங்குவதால், பருவ கால நோய்களான டெங்கு, நிஃபா, எலிக்காய்ச்சல் என பல பாதிப்புகளையும் தடுக்கும் நோக்கில் முனைப்புடன் செயல்படுகிறது கேரள அரசு. இதுபோன்ற நேரத்தில் வெஸ்ட் நைல் பாதிப்பு பரவுவது, அம்மக்களுக்கும் அரசுக்கும் கூடுதல் சவாலை கொடுத்திருக்கிறது.