மகாராஷ்ட்ராவின் புனேவில் கில்லியன்-பேர் சிண்ட்ரோம் (Guillain-Barré Syndrome) என்ற பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் இந்த பாதிப்பு காரணமாக மகாராஷ்ட்ராவின் சோலாபூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் சமீபத்தில் புனே வந்திருந்ததால் அப்போது அவருக்கு இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
தற்போதைய நிலவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “GBS எனப்படும் இந்த பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை ஜன 26-ல் 101 என்று ஆகியுள்ளது. அவர்களில் 68 பேர் ஆண்கள், 33 பேர் பெண்கள். இவர்களில் 16 பேர் வெண்டிலேட்டர் உதவியோடு உள்ளனர். சோலாப்பூரில் ஒருவர் இந்நோயால் உயிரிழந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது” என்றுள்ளார்.
உயிரிழந்த நபருக்கு 40 வயதென்றும், அவருக்கு வயிற்றுப்போக்கு, சளி, இருமல் போன்ற பாதிப்புகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. கடந்த 18ம் தேதி தனியார் மருத்துவமனையொன்றில் திவீர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், பின் சற்று உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலில் அவர் உயிரிழந்துள்ளார் என சொல்லப்படுகிறது. இவர் உயிரிழப்பின் காரணம், பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவருமென சொல்லப்படுகிறது.
GBS எனப்படும் இந்த பாதிப்பு, திடீர் உணர்வின்மை மற்றும் தசை பலவீனத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மூட்டுகளில் கடுமையான பலவீனம், தளர்வான அசைவுகள் போன்ற அறிகுறிகளும் தெரியக்கூடும்.
சாதாரண பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனப்படுவதே, GBS ஏற்பட காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். இருப்பினும் அதிகாரிகள், அசுத்தமான நீரால் இந்த பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை அறிய, புனேவின் பிரதான குடிநீர் ஆதாயமான கடக்ஸ்வஸ்லா (Khadakwasla) அணையில் சோதனை செய்து வருகின்றனர். இது குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலரையும் பாதிக்கிறது என்றபோதிலும், பெருந்தொற்றாக மாறும் அளவும் அச்சப்பட வேண்டியதில்லை என்பது மருத்துவர்கள் சொல்லும் விஷயமாக உள்ளது. பெரும்பாலான நோயாளிகள், உரிய சிகிச்சைக்குப்பின் மீண்டுவிடுவர் என்றும் சொல்லப்படுகிறது.
பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றின்போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தவறுதலாக நரம்புகளை தாக்குவதால் ஏற்படும் அரியவகை பாதிப்புதான் இந்த Guillain Barre Syndrome எனப்படும் GBS. நோயிலிருந்து உடலை காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியே உடலை தாக்குவதால், இது ஆட்டோ - இம்யூன் வகை நோய்களின் கீழ் வருகிறது.
இதன் அறிகுறிகளாக, உடல் பலவீனம் - பக்கவதாம் உட்பட பல இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், இயல்பாக நடப்பதற்கு டிஸ்சார்ஜ் ஆகி 6 மாதங்கள் வரை ஆகுமென சொல்லப்படுகிறது. ஒரு சிலருக்கு வருடங்கள் கூட ஆகலாமாம்.
இம்யூனோக்ளோபுளின் ஊசிகள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்படும். இது ஒரு ஊசி, சுமார் ரூ 20,000 வரை இருக்கும். தற்போது இந்த பாதிப்பு அதிகரிப்பதால், மகாராஷ்ட்ரா நிதி அமைச்சர் அஜித் பவார் அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை இலவசமாக கிடைக்குமென அறிவித்துள்ளார்.