ஹெல்த்

அளவுக்கு மிஞ்சினால்... இந்த பழமொழி மாம்பழத்துக்கு பொருந்துவது ஏன் தெரியுமா?

JananiGovindhan

முக்கனிகளின் ஒன்றான மாம்பழத்தை பிடிக்காதவர்களே இருந்திட முடியாது. சேலத்து மாம்பழம், தித்துக்கும் மாம்பழம் என பாட்டுப்பாடி அதனை ருசிக்காதவர்களும் இருக்க மாட்டார்கள். அப்படியான மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாமிரம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. பழத்தில் நார்ச்சத்து உள்ளது, இது செரிமான அமைப்பு மற்றும் குடல் பாக்டீரியாக்களுக்கு நல்லது. ஆகையாலேயே மாம்பழம் பலருக்கும் சிறந்த தேர்வாக இருக்கிறது.

ஆனால் விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்தான், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு போன்ற சொற்றொடருக்கு ஏற்ப, எதையும் அதிகளவில் பயன்படுத்துவது எதற்குமே நல்லதல்ல. ருசியாக இருக்கிறதே என அதிகப்படியான மாம்பழங்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்குமாம். ஆகையால் மாம்பழங்களை மிதமான அளவில் சாப்பிடுவதே நல்லது. 

அதன்படி, மாம்பழங்களை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை என்ன என்பதை பார்க்கலாம்.

1) ரத்தத்தில் சர்க்கரையை அதிகமாக்கும்:

மாம்பழத்தில் இயற்கையாகவே இனிப்பு சுவை அதிகமிருப்பதால், அதனை அதிகளவில் உட்கொண்டால் ரத்தில் உள்ள சர்க்கரை அளவும் அதிகரிக்கும். மேலும் மாம்பழத்தை தோல் உரிக்காமல் அப்படியே சாப்பிடக் கூடிய தன்மையுடயதால், பழத்தின் செரிமானம் துரிதமாகி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

2) ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்:

மாம்பழத்தில் லேடெக்ஸ் போன்ற புரதங்கள் உள்ளன. இது பலருக்கு அரிப்பு போன்ற ஒவ்வாமைக்கு காரணமாக அமையலாம். மேலும் சருமத்தில் சிவத்தல் மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் சுவாசப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.

3) எடையை அதிகரிக்கக் கூடும்:

சம்மர் சீசனில் கிடைக்கப்பெறும் மாம்பழத்தை சாப்பிடாமல் இருப்பது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் இதில் கலோரிகள் அதிகம் இருப்பதால், அதனால் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும், அதிக கலோரிகளுடன் சர்க்கரையும் இருப்பதால், எடை அதிகரிப்பு சாத்தியமாகும்.
எனவே, ஒரு நாளில் நீங்கள் சாப்பிடும் மாம்பழங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது நல்லது. குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்போர் மாம்பழத்தை தவிர்ப்பது நலமே. அதேச் சமயத்தில் மாம்பழத்தை சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் என்ற நோக்கில் அதிகளவில் உட்கொள்ளவும் வேண்டாம்.

மேற்குறிப்பிட்டிருக்கும் குறிப்புகளை உங்களது உடல் நிலைக்கு ஏற்றவாறு, மருத்துவர்களின் உரிய பரிந்துரையோடு கடைபிடித்து ஆரோக்கியமாக வழிவகுக்கலாம்.