மருத்துவர் விளக்கம் முகநூல்
ஹெல்த்

ஒரே மாதத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்.. கோவிட் தடுப்பூசி காரணமா? மருத்துவர் விளக்கம்!

இந்தநிலையில், கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மாரடைப்பு மரணங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து மூத்த இருதயநோய் நிபுணர் அசோக் குமார் பதிலளித்திருக்கிறார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஒட்டு மொத்த மாநிலத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த தொடர் மரணங்களுக்கான சரியான காரணத்தை கண்டறிந்து, தீர்வுகளைக் கண்டறிய ஒரு நிபுணர் குழுவை அமைத்திருக்கிறார் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா,

இதுகுறித்து தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், `` கோவிட் தடுப்பூசியை அவசரமாக அங்கீகரித்து பொதுமக்களுக்கு விநியோகித்தது இந்த மரணங்களுக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் உலகெங்கிலும் சமீபத்திய ஆய்வுகள் கோவிட் தடுப்பூசிகள் மாரடைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளன.

ஹாசன் மாவட்டத்திலும் மாநிலம் முழுவதும் இந்த திடீர் தொடர் மரணங்களுக்குப் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை தடுப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஒரு அரசாங்கமாக, மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். நெஞ்சுவலி அல்லது மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம்,

"கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை" என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

மேலும், இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், "கொரோனாவுக்கு பிந்தைய பெரியவர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்து ICMR (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) மற்றும் AIIMS ஆகியவற்றின் விரிவான ஆய்வுகள், கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதியாகக் கண்டறிந்துள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மாரடைப்பு மரணங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து மூத்த இருதயநோய் நிபுணர் அசோக் குமார் பதிலளித்திருக்கிறார். அவர் கூறியது என்ன பார்க்கலாம்.

மூத்த இருதயநோய் நிபுணர் அசோக் குமார்

“ கோரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தொடர்பாக பல வதந்திகளும் சந்தேகங்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. கொரோனா தடுப்பூசி வந்த கடந்த 3 ஆண்டுகளாக இந்த குழப்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு வருகிறதா, ரத்தம் உறைகிறதா, பக்கவாதம் வருகிறதா என்றெல்லாம் தொடர்ந்து கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கிறது. இது குறித்த விரிவான தகவலை பார்க்கலாம்.

சீரம் இன்ஸ்ட்டிடூட் ஆஃப் இந்தியா ஆஸ்ரோஜெனிக்கா என்ற நிறுவனம் மூலம், இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு கொரோவிற்கான தடுப்பூசி பயன்படுத்தப்பட்டது. இந்த தடுப்பூசியால், தீவிரத்தன்மை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் கொரோனா அலைகளில் தீவிர கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், கொரோனாவின் தாக்கமும் அதிகமாகவே இருந்தது. கொரோனா தடுப்பூசி வந்தபிறகு கொரோனாவின் தீவிரத்தன்மை நன்றாகவே குறைந்திருக்கிறது . ஆனால், 3 வருடங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறதா ? இரத்தம் உறைதல் ஏற்படுகிறதா ? என்ற கேள்விகள் தொடர்கிறது.

இது தொடர்பாக பல நாடுகளில் கண்காணிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதில், தடுப்பூசி போட்ட தொடக்ககாலத்தில் மாரடைப்பு , உடலின் பல பகுதிகளில் ரத்தம் உறைதல் என்பது ஏற்படுகிறது என்பதற்கான சான்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அது 1 லட்சம் பேரில் ஒருவருக்கும் மட்டுமே என்பதும் , அது மிகவும் அரிதான பக்கவிளைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொரோனா தடுப்பூசியால்தான் இந்த பிரச்னை வருகிறது என்றும் உறுதியாக சொல்ல முடியாது.

ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், சாதாரணமாக, 1 மாதத்தில் 1 லட்சம் பேருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளது . ஆனால், கொரோனா தடுப்பூசி போட்ட காலத்தில் இந்த ரத்த உறைதல் பிரச்னை அதிகமானதா என்று கேட்டால் இல்லை. அதே சமயம் தடுப்பூசியால் இரத்தம் உறைதல் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தவும் முடியாது. ஆனால், 1லட்சம் பேரில், ஒருத்தருக்கு இரத்தம் உறைதல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கலாம் என்றுதான் சொல்லமுடியும். இது அரிதான நிகழ்வுதான்.

ஆக, ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி மக்களுக்கு நல்லதைதான் செய்திருக்கிறது என்றுதான் பார்க்கவேண்டும்.

சமீப காலமாக மாரடைப்பு அதிகரித்து கொண்டுதான் வருகிறது . காரணம், வாழ்க்கை முறையில் மாற்றம், உணவில் மாற்றம், ஆரோக்கியமில்லா வாழ்க்கையை நோக்கி நகர்ந்து செல்வது போன்றவைதான். தடுப்பூசியால் ஏற்படுமா என்று கேட்டால், ரொம்ப ரொம்ப குறைவு அல்லது இல்லையே என்றே சொல்லவேண்டும்.

பொதுமக்களுக்கு சொல்ல வேண்டியது என்னவென்றால், தடுப்பூசியால் எதாவது ஆகிவிடுமா என்கிற அச்சமே விபரீத்தை சேர்க்கும். அதை அறவே தடுத்திடுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.