Checkup for kids
Checkup for kids freepik
ஹெல்த்

பிறவி குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்வு... அவசியமாகும் ஸ்கீரினிங்!

PT WEB

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 5 முதல் 7 விழுக்காடு பேர் குறைபாட்டுடன் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆட்டிசம் முதல் இருதயம், காது கேளாமை உள்ளிட்ட பாதிப்புகள் வரை இருக்கும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என பார்க்கலாம்...

ஒரு குழந்தை கருவில் இருக்கும்போதே அதன் வளர்ச்சி எப்படி இருக்கிறது என தற்போதைய அறிவியல் யுகத்தில் எளிதில் கண்டறியலாம். பச்சிளம் குழந்தைகளை வளர்ப்பது சவாலானது மட்டுமல்ல, பல்வேறு புதுப்புது கேள்விகளையும் தாய்மார்களுக்கு கொடுக்கும். அதனை போக்கவும், பிறந்த குழந்தைகளின் குறைபாடுகளை கண்டறியும் உதவுகிறது ஸ்கீரினிங் முறை.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 6 ஆண்டுகளாக குழந்தைகளுக்கான நோய்களை கண்டறியும் ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சிகிச்சை மையத்தில் அளிக்கப்படும் தொடர் பயிற்சி மூலம் குழந்தைகளுக்கான பாதிப்புகள் மெதுவாக சரிசெய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறைபாடு உடைய குழந்தைகளுக்கு வாரம் இருமுறை நேரில் தெரபி அளிக்கப்படுவதாக தாய்மார்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 2015 ஆண்டு முதல் தற்போதுவரை தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 56,82,325 குழந்தைகள் பிறந்துள்ளன. அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஸ்கீரினிங் செய்யப்பட்டுள்ளது. இதில், 62,350 குழந்தைகள், பிறவி இருதய குறைபாடு, பிறவி வளை பாதம், அன்னப்பிளவு மற்றும் உதடு பிளவு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

குறைபாடு உள்ள 34,593 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 27,957ஆக உள்ள நிலையில், அதில், 27,474 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சாதாரணமாக குழந்தைகள் இருந்தாலும், ஸ்கீரினிங் செய்வதன் மூலமே அவர்களின் குறைபாடுகளை கண்டறிய முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இதயம், காது குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளை ஸ்கிரீனிங் மூலம் கண்டறிந்து அதற்கேற்ப தெரபி அளிக்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ளனர்.

ஆட்டிசம் குறைபாடு உடைய குழந்தைகளுக்கும் ஆய்வு மையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வீட்டிலும் அவர்களது பெற்றோர் சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது.