கோப்புபடம் Ai
ஹெல்த்

திறன் இழக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள்? வெளியான ஐ.சி.எம்.ஆர் ஆய்வறிக்கை!!

நாடு முழுவதும் உள்ள 30 பெரிய சிறப்பு மருத்துவமனைகள், 12 மாவட்ட மருத்துவமனைகள் உட்பட 34 சிறிய மருத்துவமனைகளில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

PT WEB

சாதாரண நோய்த் தொற்றுகள் முதல் தீவிர சிகிச்சை பிரிவு வரை உயிர்காக்கும் கவசமாக விளங்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள், தற்போது தங்களின் செயல் திறனை வேகமாக இழந்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பு கண்காணிப்பு ஆய்வறிக்கையில் சாதாரண பாக்டீரியாக்கள் கூட வழக்கமான ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாமல் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நாடு முழுவதும் உள்ள 30 பெரிய சிறப்பு மருத்துவமனைகள், 12 மாவட்ட மருத்துவமனைகள் உட்பட 34 சிறிய மருத்துவமனைகளில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. குறிப்பாக, சிறுநீரக மற்றும் குடல் தொற்றுகளை ஏற்படுத்தும் இ-கோலை பாக்டீரியாக்களில், வெறும் 9 சதவீதம் மட்டுமே சிப்ரோஃப்ளோக்சசின் மருந்துக்கும், 18.4 சதவீதம் செஃபோடாக்சிம் மருந்துக்கும் கட்டுப்படுவது தெரியவந்துள்ளது.

நிமோனியா மற்றும் ரத்தத் தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிப்பதில் சக்திவாய்ந்த கார்பபெனெம் மருந்துகள் 40 சதவீதத்துக்கும் குறைவாகவே வேலை செய்வதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளைத் தாக்கும் 91.1 சதவீத பாக்டீரியாக்கள், கார்பபெனெம் மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை. வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் ஷிகெல்லா மற்றும் இ-கோலை பாக்டீரியாக்களை எதிர்ப்பதில் சிப்ரோஃப்ளோக்சசின் போன்ற மருந்துகள் மிகக் குறைவாகவே எதிர்வினையாற்றுகின்றன.

அதேசமயம், டைபாய்டு காய்ச்சலை ஏற்படுத்தும் சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியா, அசித்ரோமைசின் மற்றும் செஃப்ட்ரியாக்சோன் ஆகிய மருந்துகளுக்கு கட்டுப்படுவது சற்று ஆறுதல் அளிக்கிறது. பிறந்து 28 நாட்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரத்தத் தொற்றுகளை ஏற்படுத்துவதில் 25.1 சதவீத காரணியாக இருக்கும் கிளெப்சியெல்லா பாக்டீரியா வழக்கமான ஆன்டிபயாடிக்குகளுக்கு கட்டுப்படாததால், குழந்தைகளின் உயிருக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆய்வகப் பரிசோதனைகளுக்குப் பிறகே சரியான ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும் என்றும், மருத்துவமனைகளில் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.