Diabetic ICMR study
Diabetic ICMR study File Image
ஹெல்த்

இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய் - அதிர்ச்சியளிக்கும் ICMR ஆய்வு

Justindurai S

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு ஒன்று உலகப்புகழ் பெற்ற இங்கிலாந்து இதழான லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில், இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் 13 கோடிக்கும் மேற்பட்டோர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் (ப்ரீ-டயாபெட்டிக்) உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 44 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்களிடம் 18 அக்டோபர் 2008 முதல் 17 டிசம்பர் 2020 வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Diabetic ICMR study

நாட்டில் அதிகபட்சமாக கோவாவில் 26.4 சதவீதம் பேருக்கும், அடுத்தபடியாக புதுச்சேரியில் 26.3% பேருக்கும், கேரளாவில் 25.5% பேருக்கும் நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே குறைந்த பட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 4.8 சதவீதம் பேருக்கு மட்டுமே நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இம்மாநிலத்தில் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்போரின் எண்ணிக்கை 18 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியைவிட அதிகமாகும்.

அதேபோல் நீரிழிவு பாதிப்பு குறைவாக பதிவாகியுள்ள மாநிலங்களில் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதனால் அடுத்த சில ஆண்டுகளில் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் நீரிழிவு நோயாளிகளின் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கோவா, கேரளா, தமிழ்நாடு மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் ப்ரீ-டயாபெட்டிக் நிலையில் உள்ளவர்கள் குறைவாக உள்ளனர். புதுச்சேரி மற்றும் டெல்லியில் நீரிழிவு மற்றும் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை சரிசமமாக உள்ளது.

Diabetic ICMR study

ஒருவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யும்போது வெறும் வயிற்றில் அவரது ரத்தச் சர்க்கரை அளவானது 126-க்கு மேல் இருந்தாலோ, சாப்பிட்ட பிறகு 200-க்கு மேல் இருந்தாலோ அதை நீரிழிவு என்று மருத்துவர்கள் எடுத்துக்கொள்வார்கள். ரத்தச் சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 99 முதல் 125 வரை இருந்தாலோ, சாப்பிட்ட பிறகு 140 முதல் 199 வரை இருந்தால், அதை 'ப்ரீ டயாபட்டிஸ்' எனப்படும் நீரிழிவுக்கு முந்தைய நிலை என்று மருத்துவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

ப்ரீ டயாபட்டிஸ் என கண்டுபிடிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதி பேருக்கு எதிர்காலத்தில் அது நீரிழிவாக மாறும் வாய்ப்புகள் உள்ளது என்றும் மூன்றில் ஒரு பகுதியினர் நீரிழிவுக்கு முந்தயவர்களாகவே இருக்கலாம் என்றும் மீதமுள்ளவர்கள் ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் நிலைமையை மாற்றியமைக்கலாம் என்றும் கூறுகிறார் மூத்த நீரிழிவு நிபுணர் டாக்டர் வி மோகன்.

Diabetic ICMR study

மேலும் இந்தியாவில் 35.5 சதவீத மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகவும், 81.2 சதவீதத்தினருக்கு 'டிஸ்லிபிடெமியா' (Dyslipidemia) எனப்படும் கொலாஸ்ட்ராலில் சீரற்ற நிலை, 28.6 சதவீதத்தினருக்கு பொதுவான உடல் பருமன் மற்றும் 39.5 சதவீதத்தினருக்கு வயிறு பருமன் போன்ற பிரச்னைகள் உள்ளன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.