ICMR
ICMR புதிய தலைமுறை
ஹெல்த்

“தீடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை” - ICMR விளக்கம்

ஜெனிட்டா ரோஸ்லின்

இளைஞர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்களுக்கு அதாவது மாரடைப்பு போன்றவற்றால் ஏற்படும் திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் இந்தியாவில் பொருளாதார இழப்பு அதிகம் ஏற்பட்ட நிலையில், உயிரிழப்பும் அதிகம் ஏற்பட்டன. மேலும் தற்சமயங்களில் 18 - 45 வயது நிரம்பியவர்களிடம் திடீர் மாரடைப்பு போன்ற மரணங்கள் ஏற்படுவது அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி, ‘இந்த திடீர் மரணத்திற்கு காரணம் கொரானா தொற்றிலிருந்து பாதுகாக்க செலுத்தப்பட்ட தடுப்பூசிகள்தான்’ என்று வதந்திகள் பரவி வந்தது.

அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 12 பக்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, கோவை கேஎம்சிஎச், கோவை பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி கழகம் மேலும் பல மருத்துவமனைகளின் மூத்த டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட 12 பக்க அறிக்கையில், “இந்தியா முழுவதும் உள்ள 47 மூன்றாம் நிலை மருத்துவர்களின் பங்கேற்பின் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கு இடையில் 18 - 45 வயதில் திடீர் மரணங்களால் உயிரிழந்த 29,171 பேரின் மருத்துவ அறிக்கைகள் இதில் ஆராய்யப்பட்டன. மேலும் 729 பேருக்கு பரிசோதனையும், 2,916 பேரிடம் இது குறித்த தகவல்களும் கேட்டறியப்பட்டன.

இதன் மூலம் கொரோனா தடுப்பூசி 1 டோஸ் செலுத்தியவர்களின் இறப்பு விகிதம் அதிகமாகவும், 2 ஆம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் இறப்பு விகிதம் குறைவாகவும் இருப்பதை அறியமுடிந்தது. அப்படி ஏற்படும் இந்த திடீர் மரணங்களுக்கு குடும்ப வரலாறு, மதுப்பழக்கம், தவறான வாழ்க்கை முறை மாற்றங்கள், மிகஅதிக அளவு உடல் உழைப்பில் ஈடுபடுவது போன்றவைதான் முக்கிய காரணங்களாக அமைகின்றன. எனவே இளம் வயதினரிடையேயான ஏற்படும் திடீர் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசிகள் காரணமல்ல” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாத தொடக்கத்திலேயே இந்த ஆய்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த 12 பக்க அறிக்கையானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, திடீர் மரணங்கள் மற்றும் மாராடைப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களின் சந்திப்பில் குறிப்பிடுகையில், “தீவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்க அதீத உழைப்பு, அதீத ஓட்டம், அதீத உடற்பயிற்சி, அதீத ஜிம் பயிற்சி போன்றவற்றை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு தவிர்க்க வேண்டும் என ஐ சி எம் ஆர் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.