ஹெல்த்

கர்ப்ப காலத்தில் அடிக்கடி மாறும் மனநிலை... கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது என்ன?

Sinekadhara


கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி மனநிலையில் மாற்றம் ஏற்படுவது சாதாரணமாக நடக்கும். அந்த ஒன்பது மாதங்களில் அதிக மகிழ்ச்சி, உற்சாகம், சோகம், சோர்வு என மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.

வேகமான மாற்றமடையும் ஹார்மோன்களால் உடல் அசௌகர்யங்களும் இருக்கும். உடல் மாற்றம் அடைய அடைய உணர்ச்சிகளிலும் மாற்றம் ஏற்படும். கர்ப்பகாலத்தில் உணர்ச்சி மற்றும் மனநிலை நன்றாக இருக்கவேண்டும். அப்போதுதான் கருவில் இருக்கும் குழந்தையின் உடல் மற்றும் மனநிலை நன்றாக இருக்கும்.

மனநிலையை நன்றாக வைத்திருக்க சில வழிகளை பின்பற்றலாம்.

உங்கள் துணையுடன் பேசுங்கள்

உங்கள் துணை மற்றும் குடும்பத்தாரிடம் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று விளக்குங்கள். எப்போது வேண்டுமானாலும் கோபம் வரும், அதேபோல் எப்போது வேண்டுமானாலும் அழுகை வரும். உங்கள் துணை செய்யும் எந்த செயலால் உங்களுக்கு எரிச்சல் வருகிறது என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறுங்கள். குடும்பத்தார், நண்பர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.

நன்றாக சாப்பிடுங்கள்

கர்ப்பகாலத்தில் உணவுகளின்மீது நாட்டம் இருக்கும். பிடித்த உணவு கிடைக்காவிட்டால் அளவுக்கு அதிகமாக கோபம் வரும். ஊட்டச்சத்துமிக்க, ஆரோக்யமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலும், மனமும் சுறுசுறுப்பாக இருக்கும்.

நன்றாக தூங்குங்கள்

சோர்வாக இருக்கும்போது மனநிலையில் ஏற்படும் மாற்றத்தை சமாளிப்பது சிரமம். பகல்நேரத்திலும் அடிக்கடி சிறிதுநேரம் தூங்கி ஓய்வெடுப்பது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதுடன் உற்சாகமாக இருக்கவும் உதவும். மனநிலை மாறும்போது தூக்கத்தைவிட சிறந்த தீர்வு இருக்கமுடியாது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்துகிறது. மனது பாரமாக இருப்பதை உணர்ந்தால் சிறிது தூரம் நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம். யோகா மற்றும் தியானம் போன்றவையும் பெரிதும் உதவும்.

பொழுதுபோக்குக்கு நேரம் ஒதுக்குங்கள்

எங்கே சந்தோஷமும் மகிழ்ச்சியும் கிடைக்கிறதோ அங்கு அதிகநேரம் செலவிடுங்கள். நல்ல திரைப்படங்கள், நண்பர்களுடன் நேரம் செலவிடுதல், ஒருநாள் சுற்றுலா செல்லுதல், தோட்டம் மற்றும் பூங்காவில் அமர்ந்து புத்தகம் படித்தல் போன்றவை பெரிதும் உதவும். உங்கள் துணையிடம் மசாஜ் மற்றும் ஸ்பாவிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறுங்கள்.

மனநிலை மாற்றம் என்பது கர்ப்பகாலத்தில் சாதாரணமாக நடக்கும் ஒன்று. எனவே சுற்றி இருப்பவர்களின் உதவியுடன் உங்களை நீங்களே உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்.