ஹெல்த்

முரண்பாடுகளில் சிக்கி சின்னாபின்னமாகிறீர்களா? Couple Goal Zone-க்கு வர சிறந்த டிப்ஸ் இதோ!

JananiGovindhan

பெற்றோரோ, தம்பதியோ, காதலர்களோ, சகோதர சகோதரிகளோ, நண்பர்களோ எந்த உறவாயினும் முரண்பாடுகளே இல்லாமல் அமைவதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றுதான். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறைகளோ, எண்ணங்களோ அவரவர்கள் தேவைக்கேற்ப இருப்பதெல்லாம் இயற்கையானவையே.

வெவ்வேறு விதமான கருத்துகள் முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றை எவ்வாறு இன்னொருவருக்கு எடுத்து சொல்கிறோம் என்பதில்தான் அந்த சூட்சமும் சூத்திரமும் அடங்கியிருக்கும். கலவையான விமர்சனங்களையே கொண்டிருந்தாலும் புரிதலுடன் இருந்தால் மட்டுமே அந்த உறவை கடைசியில் காப்பாற்றிக் கொள்ள முடியும். மோதல்கள், முரண்பாடுகள், சண்டைகள் இயல்பானவையாக இருந்தாலும், அது இடைவிடாது தொடர்ந்தால் தீர்க்கவே முடியாத சிக்கல்களுக்கே வித்திடும். ஆகவே இந்த முரண்பாடுகள் குறித்த பிரச்னைகளை களைவதற்கு இருக்கும் சில குறிப்புகளை காணலாம்.

உங்களுக்கான எல்லையில் கவனம் வேண்டும்:

விவாதமோ, சண்டையோ கருத்து வேறுபாடு எதுவாக இருந்தாலும் அனைவருக்குமான அடிப்படை எதிர்ப்பார்ப்பு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதே இருக்கும். அந்த எல்லையை கடந்துவிட்டால் உடனடியாக அந்த பேச்சை நிறுத்தச் சொல்லும்படி கூறுவிட்டு அவ்விடத்தை விட்டு செல்வதே நல்லது.

உண்மையான பிரச்னை எது என உணரவும்:

சமயங்களில் சிறிய பிரச்னைகூட பேச பேச எதிரே இருப்பவர்களின் ஈகோவை தூண்டக் கூடும். அப்போது விடும் வார்த்தைகள் எரிமலையை போல வெடித்து சிதறவைக்கும். ஆகவே பேசவேண்டிய பிரச்னையை தவிர்த்து மற்றவற்றில் ஈடுபட வேண்டாம். விவாதமாக இட்டுச் செல்வதற்கு பதில் அமைதியாக உட்கார்ந்து பேசுவதற்கான செயலில் ஈடுபடலாம்.

தீர்வு எட்டாவிட்டால் என்ன செய்வது?

எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது பிரச்னைக்கும் உங்களுக்குமான முரண்பாடே ஒழிய, பிரச்னையை இடையில் வைத்துவிட்டு வாதி பிரதிவாதிகளிடையே மேலும் பிரச்னையை வளர்த்துக்கொள்ள கூடாது. ஒருவேளை இருக்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லையென்றால் அது குறித்து மேன்மேலும் பேசி ஊதி பெரிதாக்காமல் அப்படியே விட்டு விடுவதே நலம்.

சமாதானமாவது முக்கியம்:

முரண்பாடான பேச்சுவார்த்தைகள் நீடித்தபடியே இருந்தாலும் இருதரப்பும் சேர்ந்து சமாதானம் ஆவதுதான் சிறந்த வழி. இதன் மூலம் கூடுதலான பிரச்னை எதுவும் எழாமல் தடுக்க முடியும்.

தவறை ஒப்புக்கொள்ளுங்கள்:

நீங்கள் தவறே செய்திருந்தாலும் எந்த ஈகோ எண்ணத்திற்கும் இடம் கொடுக்காமல் தயங்காமல் அதனை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பதுதான் முறை. இணையரை குற்றஞ்சாட்டுவதற்கு பதில் உங்களுடைய செயல்பாடுகள் குறித்து நீங்களே உணர்வதுதான் சிறப்பு. உறவை தக்க வைக்காமல் ஈகோவிற்கு தீனி போட வேண்டாம்.

கடுப்பாக இருந்தால் விவாதிக்க வேண்டாம்:

உங்கள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்கும் போது குறிப்பிட்ட பிரச்னை குறித்து பேசவோ, விவாதிக்கவோ வேண்டாம். ஏனெனில் கடுப்பான கோபமான மனநிலையில் இருக்கும் போது எதாவது விவாதித்தால் அதனால் முரண்பாடுகள் பன்மடங்காகுமே தவிர எந்த தீர்வும் கிட்டாது. மேலும் உறவுக்குள்ளும் விரிசலே உண்டாகும். ஆகவே மோசமான மனநிலையில் இருக்கும்போது ஒரு சிக்கலைக் கையாளுவதற்குப் பதிலாக, கூலாக இருக்கும் போது இருதரப்பும் அமர்ந்து பரஸ்பரமாக பேசலாம்.