மூத்த புற்றுநோய் மருத்துவர் பிரசாத். முகநூல்
ஹெல்த்

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்ததாக ரஷ்யா தகவல்... சாத்தியம்தானா? விளக்குகிறார் மருத்துவர்!

புற்றுநோயை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிப்பது, எந்த அளவிற்கு சாத்தியம்? அப்படி ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் ஏற்படும் பயன் என்ன? விளக்குகிறார் மூத்த புற்றுநோய் மருத்துவர் பிரசாத்.

ஜெ.நிவேதா , ஜெனிட்டா ரோஸ்லின்

புற்றுநோய் என்ற பெயரை கேட்டாலே பலருக்கு முதலில் ஏற்படுவது பயம்தான். ஆனால், ஆரம்ப காலத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை அளித்தால், புற்றுநோயும் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்தநிலையில்தான், ரஷ்யா புற்றுநோய்க்கு தடுப்பூசியை கண்டுபிடித்து மருத்துவ உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கண்டுபிடித்தது மட்டுமன்றி, புற்றுக்கு ஏதிரான தனது mRNA தடுப்பூசியை இலவசமாக நோயாளிகளுக்கு விநியோகிக்க உள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்திருக்கிறது.

சரி புற்றுநோயை தடுப்பதில் ரஷ்யாவின் தடுப்பூசி எந்த அளவிற்கு சாத்தியமான ஒன்று? இது பயன்பாட்டுக்கு வந்தால் ஏற்படும் பயன் என்ன? விளக்குகிறார் மூத்த புற்றுநோய் மருத்துவர் பிரசாத்...

DR. PRASAD E SENIOR CONSULTANT - MEDICAL ONCOLOGY, APOLLO PROTON CANCER CENTRE, THARAMANI, CHENNAI

“நோய் வருவதற்கு முன்பு போடும் மருந்தைதான் தடுப்பூசி என்கிறோம். குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்றார் போல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சில நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் இதற்கென தகுந்த அட்டவணையே போடப்படுகிறது. இதனை ’National Immunization Schedule’ என்று அழைக்கிறோம்.

இதைப்போலதான்.. கேன்சர் வராமல் இருக்க செலுத்தப்படும் மருந்தைதான் ‘cancer vaccine’ என்று கூறுகிறோம்.

தடுப்பூசி

பல வருடங்களாகவே இதற்கென அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுதான் வருகிறது. cancer vaccine என்று நாம் குறிப்பிடும்போது, அதில் பலவகைகள் இருக்கின்றன.

கருப்பைவாய்ப் புற்றுநோய்

கருப்பைவாய்ப் புற்றுநோய்

கருப்பைவாய்ப் புற்றுநோய் என்பது வைரஸ் கிருமிகளால் ஏற்படக்கூடிய பிரச்னை. இதை தடுக்க Cervarix, Gardasil போன்ற தடுப்பூசிகள் இந்தியாவிலேயே கிடைக்கின்றன. இதுப்போன்ற தடுப்பூசிகளை செலுத்தும் நபருக்கு, இந்த புற்றுநோயினால் ஏற்படும் தாக்கம் என்பது, 95-98% வரை வராமல் தடுக்கப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு புற்றுநோய் ஒவ்வொரு காரணங்களை அடிப்படையாக கொண்டு ஏற்படுகிறது.

உதாரணமாக, வாய்ப்புற்றுநோய், உணவுக்குழல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவை எல்லாம், புகையிலை, புகைப்பிடித்தல் போன்ற பழக்கவழக்கங்களால் ஏற்படக்கூடியது. இதுப்போன்ற புற்றுநோய்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை விட அவற்றை பயன்படுத்தாமல் தடுப்பதே உபயோகமாக இருக்கும்.

இதுவே, கருப்பை வாய்ப்புற்றுநோயை எடுத்துக்கொண்டால், ’human papilloma virus’ என்னும் வைரஸால் ஏற்படக்கூடியதாக இருக்கிறது. 9 - 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு இதற்கான தடுப்பூசி கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்ட குழந்தைகளுக்கு 30 வருடங்களுக்கு பிறகு ஏற்படும் கருப்பை வாய்ப்புற்றுநோய் வராமல் இருக்க 95 - 98% வாய்புகள் உண்டு.

இப்படி, வைரஸ் அல்லது கிருமிகளால் ஏற்படும் புற்றுநோயை தடுக்க தடுப்பூசிகள் பெரிதும் உதவுகின்றன.

மெலனோமா புற்றுநோய்

மெலனோமா புற்றுநோய்

மெலனோமா (தோல்) புற்றுநோய் ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. மெலனோமா (Melanoma) என்கிற தோல் புற்றுநோய். இது போன்றவற்றுக்கு தடுப்பூசிகள் சோதனை அளிவில்தான் இருக்கின்றன. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. phase 1, phase 2, phase 3 போன்ற பல மருத்துவ பரிசோதனை செய்து முடித்த பின்னர்தான் மக்களின் பயன்பாட்டிற்கு வரும்.

ரஷ்ய தடுப்பூசி சாத்தியமா?

இதேபோல, ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கேன்சருக்கான தடுப்பூசி என்பதும் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது. ஆய்வக சோதனையில்தான் இருக்கிறது. இந்த தடுப்பூசி என்பது பொதுவான புற்றுநோய்கள் வராமல் தடுப்பதற்கான சாத்தியக்கூறுகளைதான் கொண்டிருக்கிறது. அது நடைமுறைக்கு வந்தால், மிகவும் நல்லது.

அதேநேரம் உலகம் முழுக்கவே குறிப்பிட்ட புற்றுநோய்க்கான தடுப்பூசி என, ஒவ்வொரு புற்றுநோய்க்குமான தடுப்பூசிகள் ஆராய்ச்சி நிலையில்தான் இருக்கிறது. அதுவே நமக்கு அதிகம் தேவை.

மார்பக புற்றுநோய்

உதாரணமாக, இந்தியாவை பொறுத்தவரை கருப்பை வாய்புற்றுநோய் என்பது பொதுவான புற்றுநோய். அதற்கு நம்மிடையே குறிப்பிட்ட தடுப்பூசி உள்ளது. இப்படி ஒவ்வொரு வகையான புற்றுநோய்க்கும் தனித்தனி தடுப்பூசிகள் தேவை. வருங்காலத்தில் அவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுவும் வந்தால், இன்னும் அதிக பலன் கிடைக்கும் “ என்றார்.