நமது குடல் ஆரோக்கியம் என்பது வெறும் செரிமானத்தைப் பற்றியது மட்டுமே அல்ல என்றும் அது இதயத்தின் செயல்பாட்டுடனும் தொடர்புடையது எனவும் இதய மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குடலில் ஏற்படும் பிரச்னை ஒட்டுமொத்த உடல்நலத்தையும் பாதிக்கும் என்றும் குறிப்பாக, இதயத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இதய நோய் நிபுணரான டாக்டர் அலோக் சோப்ரா தெரிவிக்கிறார். ஆரோக்கியமற்ற குடல், நச்சுக்களை உற்பத்தி செய்வதாகவும், அவை இரத்த ஓட்டத்தில் நுழைந்து, வீக்கத்தை ஏற்படுத்தி இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கிறார். எனவே, குடலைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம் செரிமானப் பிரச்னைகள் மட்டுமல்லாமல் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதயப் பிரச்னைகளின் அபாயத்தையும் குறைக்கிறது என டாக்டர் அலோக் சோப்ரா கூறுகிறார்.
எனவே, குடலைப் பாதுகாக்க, கார்பனேட் பானங்கள், வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். மேலும், குறைந்த தூக்கம், அதிக மன அழுத்தம் போன்றவையும் குடல் செயல்பாட்டைப் பாதிக்கும் என்று அவர் எச்சரிக்கிறார். ஆகவே, மெதுவாகவும் உணர்வு பூர்வமாகவும் சாப்பிடுவது, உணவு அளவைக் கட்டுப்படுத்துவது, சாப்பிட்டபிறகு சிறிது தூரம் நடப்பது போன்ற வழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும், பழங்கள், காய்கறிகள் மற்றும் முழுத் தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்றும் அது குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களுக்கு உணவளிப்பதாகவும் டாக்டர் அலோக் சோப்ரா தெரிவிக்கிறார்.