Cardiac deaths  web
ஹெல்த்

இந்தியாவில் அதிகரிக்கும் இதயநோய் மரணங்கள்.. காரணம் ஏன்? தடுப்பதற்கு வழி என்ன?

இந்தியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இதயநோய்கள் ஏற்படுகிறது என்றும் இந்தியாவில் உயிரிழப்புகளில் இதயநோய்களால் ஏற்படுபவை 25 சதவீதமாகவும் இருக்கிறது. ஒரு லட்சம் பேரில் இதயநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 272 ஆக இருக்கிறது.

PT WEB

இந்தியாவில் மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான உயிரிழப்புகள் ஓர் அமைதியான நெருக்கடியாக உருவெடுத்து வருவதாகப் புதிய ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. இதுகுறித்த தொகுப்பைப் பார்க்கலாம்.

பி.எம். பிர்லா (BM BIRLA) இதய மருத்துவமனை வெளியிட்டுள்ள 'பீட் பை பீட் 2025' (Beat by Beat 2025) என்ற ஆய்வறிக்கையின்படி, உலகெங்கிலும் நிகழும் இதயநோய் மரணங்களில் இந்தியா மட்டுமே 20 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளது. உலகளவில் ஒரு லட்சம் பேருக்கு சராசரியாக 235 மரணங்கள் நிகழும் நிலையில், இந்தியாவில் இது 272ஆக உயர்ந்துள்ளது.

unhealthy food

உலக சராசரியைவிட, இந்தியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இதயநோய்கள் ஏற்படுகின்றன. இதனால் நாட்டின் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இந்தியாவில் நிகழும் மொத்த உயிரிழப்புகளில் 25 சதவீதம் இதய நோய்களால் ஏற்படுகின்றன. இதில் 60 சதவீத மரணங்கள் உரிய வயதுக்கு முன்பே நிகழ்வது பெரும் சோகமாகும்.

பிஹார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு 10இல் ஒருவருக்கு இதயநோய் இருப்பதோடு, நாட்டின் மொத்த இதய நோய் மரணங்களில் 30 சதவீதம் இங்கேயே நிகழ்கின்றன.

மாரடைப்பு அதிகரிக்க உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான கொழுப்பு, சத்தான உணவின்மை, காற்று மாசுபாடு ஆகியவை முக்கியக் காரணிகளாகக் கூறப்படுகின்றன. குறிப்பாக, மாரடைப்பு ஏற்பட்ட முதல் 60 நிமிடங்களுக்குள் சிகிச்சை கிடைக்காததால், 50% மரணங்கள் மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே நிகழ்கின்றன.

air pollution

இந்த நெருக்கடியைச் சமாளிக்க, 30 வயதுக்கு மேற்பட்டோர் வழக்கமான பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் அணியக்கூடிய சென்சார்கள் மூலம் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவதும், சிறிய நகரங்களில் அவசர சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதும் காலத்தின் கட்டாயம் என இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.