ஹெல்த்

“தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை”-சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

நிவேதா ஜெகராஜா

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பறவைக்காய்ச்சல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளவும் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நேற்று இரவு தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நேற்று இரவு ஒமைக்ரான் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில், மாவட்டங்களில் உள்ள மருத்துவ படுக்கைகளை தயார் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஹை-ரிஸ்க் பட்டியல் நாடுகளில் இருந்து வந்த 12,503 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்களில் உத்தேச பரிசோதனை மூலம் 1,947 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்படியாக மொத்தம் 14,450 பேருக்கு பரிசோதனை செய்துள்ள நிலையில், அதில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த கொரோனா அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்த நிலையில், தற்பொழுது தமிழகத்தில் அப்படியான சூழல் ஏற்படாதிருக்க முன்னெச்சரிக்கை செய்துள்ளோம். ஆகவே இப்போது தமிழகத்தில் அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் 40,024 ஆக்சிஜன் படுக்கைகளும், 8600 ஐசியு படுக்கைகளும் உள்ளன. கொரோனா சிகிச்சைக்கான அனைத்து மருந்துகளும் கையிருப்பில் போதுமான அளவு உள்ளது.

இவை மட்டுமன்றி பறவைகாய்ச்சல் தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான 3 லட்சம் மருந்துகள் கையிருப்பில் உள்ளது” என தெரிவித்தார்.