ஹெல்த்

88% இறப்பு சதவிகிதம் கொண்ட 'மார்பர்க்' வைரஸுக்கு தடுப்பூசி கண்டறியும் பணிகள் தீவிரம்: WHO

நிவேதா ஜெகராஜா

எபோலா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் ஃபிலோ வைரஸ், மார்பர்க் என்ற புதிய வகை பாதிப்பொன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்ட ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர், அந்த நோய்த்தாக்கத்தால் உயிரிழந்திருக்கிறார்.

மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த கினியா நாட்டின் தென்மேற்கு பகுதியில், கடந்த மாத இறுதியில், 'மார்பர்க்' என்றொரு வைரஸ் தாக்கம் ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டிருந்தது. அந்த வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தெரியவந்து, 8 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட அந்நபர் உயிரிழக்கவும் செய்திருந்தார். இந்தத் தகவலை கினியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிசெய்தது. இதை தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று கள நிலவரத்தை அறிய அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து அங்கு நோய்த்தடுப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த வைரஸ், கொரோனாவின் தாக்கத்தில் ஒருசிலவற்றை தன்னிடம் கொண்டிருப்பதால், தற்போதைக்கு இந்த பாதிப்பு தெரியவருபவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி, அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களையும், அவர்கள் தங்கியிருந்த பகுதியை சேர்ந்தவர்களை சோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறையினர் முயன்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எபோலா, கொரோனாவை போல, இதுவும் விலங்கிலிருந்தே மனிதர்கள் மத்தியில் பரவுகிறது என உலக சுகாதார நிறுவனம் உறுதிசெய்துள்ளது. எபோலாவுக்கு வழிவகுக்கும் வைரஸாக இது இருப்பதால், இது வௌவால்களிடமிருந்து பரவியிருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, தீவிர மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழப்பது தெரியவந்துள்ளது. அதேநேரம் இந்த பாதிப்பு கொரோனா போல காற்றில் பரவுவது இல்லை. மாறாக, ரத்தம் வழியாகவோ - நோயாளிகளின் உடலிலிருந்து வெளியேறும் திரவம் வழியாகவோ மட்டுமே பரவும். இதன் அறிகுறிகளாக அதிகப்படியான காய்ச்சல், தீவிர தலைவலி, தசை வலி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி போன்றவை இருக்கும்.

88% இறப்புவிகிதம் கொண்டுள்ள இந்த பாதிப்புக்கு இதுவரை தடுப்பூசி எதுவும் தயாரிக்கப்படவில்லை என்றாலும், விரைவில் அதற்கும் தடுப்பூசி கிடைக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அதேநேரம், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் கொரோனா பாதிப்பு இன்னமும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பதாகவும் வேதனையும் தெரிவித்துள்ளது.