கிரீன் மேஜிக் பிளஸ் முகநூல்
ஹெல்த்

‘கிரீன் மேஜிக் பிளஸ்’ என்ற பெயரில் புதிய பால் வகை; கண்டனம் தெரிவிக்கும் பால் முகவர்கள்! காரணம் என்ன?

சோதனை அடிப்படையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் பிளஸ் பால் நாளை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் பால் முகவர்கள், இந்த வகை பாலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: விக்னேஷ்முத்து

கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில் புதிய பச்சை உறை பாலை சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யவுள்ளது ஆவின் நிறுவனம். இதற்கு, “பாலின் தன்மை குறித்த விவரங்கள் இல்லாமல், மறைமுக விலையேற்றத்தை கொண்டு வருகின்றனர்” என பால் முகவர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடியாகத் ஆவின் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. ஆண்டுக்கு 30 லட்சம் லிட்டர் அளவில் பால் விற்பனை செய்துவரும் ஆவின் சார்பில், அவ்வப்பொழுது புது வகையான பால் மற்றும் பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

தற்பொழுது, குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இடையே வைட்டமின் "ஏ" மற்றும் "டி" சத்து குறைபாடு இருப்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதால், அதற்கு ஏற்றவாறு 4.5 சதவீதம் கொழுப்புச் சத்து மற்றும் 9 சதவீதம் இதர சத்துக்களுடன் கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகை பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

சோதனை அடிப்படையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் பிளஸ் பால் நாளை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மேலும், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவையும் குறைக்கவில்லை என ஆவின் தரப்பில் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், முழுமையான விவரங்களின்றி புதிய வகை பால் அறிமுகம் செய்யப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதேபோல், மறைமுகமாக பொதுமக்களுக்கு விலையேற்றத்தை கொண்டு வருவதாக பால் முகவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, அனைவரும் விரும்பும் வகையிலேயே கிரீன் மேஜிக் பிளஸ் பால் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார்.