Bacteria
Bacteria Unsplash
ஹெல்த்

’இரண்டு நாளிலேயே மரணம்?’ அமெரிக்காவை அச்சுறுத்தும் ’மாமிசம் உண்ணும்’ பாக்டீரியா - காரணம் இதுதான்!

Snehatara

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் விப்ரியோ வல்னிஃபிகஸ் தொற்று அதிகரித்து வருகிறது. சூடான நீரானது இந்த அரிய வகை மாமிசம் உண்ணும் பாக்டீரியாவான விப்ரியோ வல்னிஃபிகஸ் தொற்று அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையத்தின் கூற்றுப்படி, விப்ரியோ வல்னிஃபிகஸ் பாக்டீரியாவானது உயிருக்கே ஊறு விளைவிக்கும் தொற்று காயங்களை ஏற்படுத்தக்கூடியது. விப்ரியோ வல்னிஃபிகஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்யேக பராமரிப்பு தேவை அல்லது பெரும்பாலும் மூட்டுக்களை நீக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். மேலும் பாதிக்கப்பட்ட ஐந்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்ட ஒன்று அல்லது இரண்டு நாட்களில் இறக்கும் நிலை ஏற்படும்.

Bacteria

சில விப்ரியோ வல்னிஃபிகஸ் பாக்டீரியா தொற்றானது நெக்ரோடைசிங் ஃபாசிட்டிஸ் தொற்றுக்கு வழிவகுக்கிறது. இந்த தொற்றால் திறந்த புண் ஏற்பட்ட இடத்தில் உள்ள மாமிசமானது இறந்துவிடுகிறது. நெக்ரோடைசிங் ஃபாசிட்டிஸ் தொற்றானது ஒன்றுக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்களால் உருவாக்கப்பட்டாலும், இதனை ”மாமிசம் உண்ணும் பாக்டீரியா” என அழைக்கின்றனர். 1988 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அமெரிக்காவில் 1,100க்கும் அதிகமானோர் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மேலும் 159 இறப்புகள் பதிவானதாகவும் அறிவியல் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அனைத்துக்கும் மேலாக பாக்டீரியா பரவலானது காலநிலை மாற்றம் மற்றும் சமூகத்தைப் பொறுத்தது. தீவிர வெப்பமயமாதலால் இந்த மாமிசம் உண்ணும் பாக்டீரியா பரவலானது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.