குறட்டை, மூச்சுத் திணறல் போன்றவை ஆழ்ந்த தூக்கத்தை பாதிக்கின்றன. தைராய்டு, ரத்த சோகை போன்றவை நீண்ட நேரத் தூக்கத்துக்குப் பிறகும் சோர்வை உண்டாக்கும். மன அழுத்தம், கவலை மூளையை ஓய்வெடுக்க விடுவதில்லை. சீரற்ற தூக்க நேரம், காஃபின், மது ஆகியவை மெலடோனின் சுரப்பை பாதிக்கின்றன.
தூக்கத்தின் அளவு முக்கியமல்ல, அதன் தரமே முக்கியம் என்கின்றனர் வல்லுநர்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரையில் தூக்கத்தின் நேரத்தைவிட, அந்தத் தூக்கம் உடலை எவ்வளவு தூரம் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது என்பதே முக்கியம் என்கிறார் ஏசியன் மருத்துவமனையின் நிபுணர் டாக்டர் மானவ் மஞ்சந்தா. பல நேரங்களில், நாம் தூங்கிக்கொண்டிருக்கும்போதே ஏற்படும் நுட்பமான இடையூறுகள் நம் ஆழ்ந்த தூக்கத்தைக் கெடுக்கின்றன. குறட்டை அல்லது தூக்கத்தில் மூச்சுத் திணறல், கால்களில் ஏற்படும் ஒருவித அசதி போன்ற பிரச்சினைகளால் தூக்கம் துண்டுபடலாம் என்கின்றனர் நிபுணர்கள். தைராய்டு குறைபாடு, ரத்த சோகை, சர்க்கரை நோய், ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை நீண்ட நேரத் தூக்கத்துக்குப் பிறகும் சோர்வை உண்டாக்கும். மன அழுத்தம், கவலை போன்றவை மூளையை முழுமையாக ஓய்வெடுக்க விடுவதில்லை.
இரவு நேரங்களில் கைபேசித் திரையைப் பார்ப்பது, சீரற்ற தூக்க நேரம், காஃபின், மது அருந்துதல் போன்றவை தூக்கத்தை வரவழைக்கும் 'மெலடோனின்' ஹார்மோன் சுரப்பைப் பாதிக்கின்றன என்கின்றனர் நிபுணர்கள். வழக்கமான தூக்கத்துக்குப் பிறகும் தொடர்ந்து பல வாரங்களாகச் சோர்வு, தலைவலி, கவனக்குறைவு மற்றும் அதிகப்படியான பகல் நேரத் தூக்கம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். முறையான தூக்கம் இல்லையெனில் அது இதயம் சார்ந்த நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.