மார்பகப் புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய் freepik
ஹெல்த்

“இவற்றை செய்தால், மார்பகப் புற்றுநோயிலிருந்து எளிதாக மீண்டுவிடலாம்!”

ஜெ.நிவேதா

அங்காடித்தெரு படத்தில் நடித்த நடிகையொருவர், மார்பகப்புற்றுநோயால் இறந்ததாக நேற்று காலை செய்திகள் வெளியாகின. இச்செய்தி ‘ மார்பகப்புற்றுநோய் ஒரு உயிர்க்கொல்லிநோயோ’ என்ற அச்சத்தை பலருக்கும் ஏற்படுத்தியது. இந்த நேரத்தில், “மார்பகப் புற்றுநோய், முற்றிலும் சரிசெய்யக்கூடிய ஒரு நோய்” என்று நமக்கு அழுத்தமாக சொல்கிறார், மார்பக ஆன்கோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் மஞ்சுளா ராவ்.

மார்பக ஆன்கோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஞ்சுளா ராவ்

மார்பகப்புற்றுநோயை முதல் நிலையிலேயே அறிவது எப்படி, இப்புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் என்னென்ன உள்ளிட்டவை குறித்து மார்பக ஆன்கோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஞ்சுளா ராவ் (Apollo Proton Cancer Centre, Chennai), நம்மிடம் பகிர்ந்துகொண்ட மிக முக்கிய தகவல்கள், இங்கே:

“மார்பகப் புற்றுநோயைத் தடுக்க அதை முதல்நிலையே அறிவது கட்டாயமாகிறது. இந்தியாவில் மார்பகப்புற்றுநோய் ஏற்படும் பெண்களின் எண்ணிக்கை, 40 - 45 வயதென்றே இருக்கிறது. இதன் பின் வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் பாதிப்புக்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. முதல் நிலையிலேயே நோயை கண்டறிந்துவிட்டால் அதிலிருந்து மீள்வது எளிது.

எப்படி கண்டறிவது?

18 வயது நிரம்பிய ஒவ்வொரு பெண்ணும், மாதம் ஒருமுறை சுயமாக மார்பக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக மகளிர் நல மருத்துவரை அணுக வேண்டும்.

40 வயதைக் கடந்த பிறகு, ஒவ்வொரு வருடமும் பெண்கள் மேமோகிராம் செய்துகொள்ள வேண்டும்

Mammogram

சுயமாக மார்பகப்பரிசோதனை செய்யும்போது, என்னென்ன மாற்றங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை?

- சருமத்தில் மாற்றம் இருப்பது (கரடு முரடாக இருப்பது போல வழக்கத்துக்கு மாறாக)

- முலைக்காம்பில் மாற்றம் இருப்பது / அதுசார்ந்த அசௌகரியங்கள்

- ஆரஞ்சு தோல் போல சருமம் ஆவது

- புதிய கட்டிகள்

போன்றவை மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டியவை.

மார்பக சுயப்பரிசோதனையின்போது, கவனிக்க வேண்டியவை

யாருக்கெல்லாம் மார்பகப்புற்றுநோய் வர வாய்ப்புள்ளது?

பெண்ணாக இருந்தாலே, மார்பகப்புற்றுநோய்க்கான வாய்ப்புள்ளது. இதை மனதில் வைத்துக்கொண்டு, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய்க்கு பின் 5 - 8 நாட்கள் கழித்து சுயமாக மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்

மாதவிடாய் காலம் கழித்து 5 - 8 நாட்களில் செய்யச்சொல்ல காரணம், அந்த நேரத்தில் மார்பகம் கடினமானதாக இருக்காது. இலகுவாக இருக்கும். ஆகவே பரிசோதிப்பதும் எளிது, மாற்றத்தை உணர்வதும் எளிது.

ஏன் மாதம் ஒருமுறை சுயபரிசோதனை செய்யவேண்டும்?

மாதம் ஒருமுறை சோதனை செய்யும்போது, அப்பெண் தன்னுடைய மார்பகத்தின் தன்மையை புரிந்துகொள்வார். ஆகவே அதில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அதை எளிமையாக கண்டறிய முடியும்.

இதேபோல வருடம் ஒருமுறை மேமோகிராம் என்றும் சொன்னேன். அதற்கு காரணம், சுயபரிசோதனையின்போது நோயை கண்டறியாமல் விட்டுவிட்டாலும்கூட, மேமோகிராமில் நிலவரம் நிச்சயம் தெரிந்துவிடும். அதற்காகத்தான் அது வருடம் ஒருமுறை.

சுயபரிசோதனை, மேமோகிராமால் என்ன நன்மை?

முதல் நிலையிலேயே மார்பகப்புற்றுநோயை கண்டறிய முடியும். இதன்மூலம்

- விரைந்து சிகிச்சையை தொடங்கிவிட முடியும். இதன்மூலம் மார்பகத்தை நீக்காமலேயே நோயாளியை முழுமையாக காப்பாற்றிவிட முடியும்.

- கட்டி தொடக்க நிலையில் மிகவும் சிறியதாக இருக்கும் என்பதால், கீமோதெரபி இல்லாமலேயே அவர்களை காப்பாற்ற முடியும். கட்டி பரவாமல் இருக்க இருக்க, சிகிச்சையின் தீவிரமும் குறையும்

- சிகிச்சைக்கு பிறகான எதிர்காலம் (Prognosis) மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

- அக்குள்களுக்கு கடினமான சிகிச்சைகளை செய்வதை தவிர்க்கலாம். இவற்றின்மூலம், வருங்காலத்தில் சிகிச்சையின் தாக்கத்தால் வரும் பக்கவிளைவுகள் குறைந்து காணப்படும்.

ஆகவே எவ்வளவு விரைந்து இந்த நோயை கண்டறிகிறோமோ, அவ்வளவு நல்லது.

சிகிச்சைகள் என்னென்ன?

சிகிச்சைகளில்,

- சர்ஜரி

- கீமோதெரபி

- ரேடியேஷன்

இந்த மூன்றிலுமே இப்போது அட்வான்ஸ்ட் சிகிச்சைகள் வந்துவிட்டன.

உதாரணத்துக்கு

முன்பெல்லாம் சர்ஜரி என்றால், முழுமையாக மார்பகத்தை அகற்ற வேண்டியிருக்கும். ஆனால் இப்போது மார்பகத்தை நீக்காமலே Breast Conservation மூலம் எளிமையாக சிகிச்சை அளிக்கமுடியும். இதில், Oncoplasty என்றொரு சிகிச்சை உண்டு. அதன்மூலம் பெரியளவில் உள்ள நெறிக்கட்டிகளை கூட, ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலம் நீக்கிவிட முடியும். இதன்மூலம் மார்பகத்தை முழுமையாக நீக்குவதை தவிர்க்கலாம்

முன்பு இந்நோயாளிகளுக்கு அக்குளில் நெறிக்கட்டி உள்ளதா என பார்ப்போம். அப்படி இருந்தால், அதை நீக்கவும் அறிவுறுத்துவோம். அப்படி நீக்கும்போது அக்குளில் உள்ள நெறிக்கட்டியுடன் கொழுப்பையும் நீக்க வேண்டியிருக்கும். ஒருவேளை முதல்நிலையிலேயே நோயை கண்டறிந்துவிட்டால், அக்குளில் பெரியளவில் சிகிச்சைகள் தேவைப்படாது. Sentinel lymph node biopsy என்றொரு சிகிச்சை உள்ளது. அதன்மூலம் அக்குள் பகுதியைக் காப்பாற்ற முடியும்.

முன்பு எல்லோருக்கும் ஒரேமாதிரி அளவு கீமோதெரபி கொடுக்கப்படும். ஆனால் முதல்நிலையிலேயே வந்தால், ஒவ்வொருவரின் நோய் தீவிரத்தை அறிந்து அவர்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே கீமோதெரபி கொடுக்கப்படும். டார்கெட் தெரபி, இம்யூனோதெரபி போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் கீமோதெரபியையே கூட தவிர்க்கலாம். பெர்சலைச்ட் ட்ரீட்மெண்டுகள் இப்போது வளர்ந்துவிட்டன.

ரேடியேஷன் தெரபி - இத்தெரபியில், முன்பெல்லாம் எல்லா நோயாளிகளுக்கும் ரேடியேஷன் அளவு மிக அதிகமாக இருக்கும். இதனால் வருங்காலத்தில் பக்கவிளைவுகள் ஏற்படும். இப்போது ஒவ்வொருவரின் உடலுக்கேற்றபடி, ரேடியேஷன் அளவை நாங்களே நிர்ணயித்துக் கொள்ள முடியும். இதை Tomotherapy என்போம். சில நோயாளிகளுக்கு உடலின் இடதுபக்கம் புற்றுநோய் இருக்கும். உடலின் அந்தப் பகுதியில்தான் இதயம், நுரையீரலெல்லாம் இருக்கும். ஆகவே அப்பகுதியில் ரேடியேஷனை குறைத்துக்கொடுக்க வேண்டும். இதற்கு Deep inspiratory breath holding என்றொரு பிரத்யேக சிகிச்சை உள்ளது. Proton therapy எனப்படும் இதயத்துக்கு ரேடியேஷன் தாக்கம் ஏற்படாமல் இருக்க தேவையான பிரத்யேக சிகிச்சைகளும் வந்துவிட்டன.

இப்படியாக மார்பகப்புற்றுநோயைக் குணப்படுத்த எண்ணற்ற சிகிச்சைகள் உள்ளன. இப்படி விரைந்து நோயைக் கண்டறிந்து, அதிலிருந்து குணமடைந்த பின்னர் சில தெரபிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். நோயாளியின் உடல்நலனுக்கு ஏற்ப, அவர்கள் ஆரோக்கிய வாழ்க்கையை மேற்கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமென அறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்தும் எண்ணற்ற மருத்துவர்கள் இன்று வந்துவிட்டனர். ஆகவே மார்பகப் புற்றுநோயை பார்த்துப் பயப்பட வேண்டாம். முதல் நிலையிலேயே கண்டறிவதற்கான வழிகளை அறிந்துக்கொண்டு, அதை செய்யுங்கள்