இந்தியாவில், இனிப்பு வகைகளின் நுகர்வு கவலைக்குரிய வகையில் அதிகரித்திருப்பதாகவும், இதனால், நீரிழிவு நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவில், இனிப்பு வகைகளின் நுகர்வு கவலைக்குரிய வகையில் அதிகரித்திருப்பதாகவும், இதனால், நீரிழிவு நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, நகரங்களில் இனிப்பு வகைகள் சாப்பிடும் பழக்கம் பெரிதும் அதிகரித்துள்ளது. கடந்த 18 மாதங்களில், மாதத்துக்கு 3 முறை அல்லது அதற்குமேல் இனிப்புகளைச் சாப்பிடும் குடும்பங்களின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் பத்தில் 7 குடும்பங்கள், பாரம்பரிய இனிப்பு வகைகளுடன் சேர்த்து, சாக்லேட், பிஸ்கட், கேக் போன்றவற்றையும் சாப்பிடுகின்றனர். 43% பேர், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பலரும், இனிப்பு உணவு வகைகளைச் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 70% பேர், குறைந்த சர்க்கரையுள்ள மாற்று உணவுகள் கிடைத்தால், அதைத் தேர்ந்தெடுப்பதாக கூறியுள்ளனர். 5% பேர் தினமும் சர்க்கரை உண்கின்றனர். 26% பேர் மாதத்திற்கு 15இல் இருந்து 30 முறை சர்க்கரை உண்கின்றனர்.
74% நகர்ப்புற குடும்பங்கள், ஒரு மாதத்திற்கு 3 முறை அல்லது அதற்கு மேல் பாரம்பரிய இனிப்புகளை உண்கிறார்கள். ICMR மற்றும் MDRF இணைந்து நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 10.1 கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13.6கோடி பேர் நீரிழிவு ஏற்படும்அறிகுறிகளுடன் உள்ளனர். 31.5 கோடிபேர் உயர் ரத்த அழுத்தத்தால்பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான சூழலில், தீபாவளி போன்ற பண்டிகைகளில் சர்க்கரை நுகர்வு அதிகரித்திருப்பதாகவும், இதனால் நீரிழிவுடன் வாழ்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பண்டிகைக் காலங்களில் இனிப்புகளைப் பரிமாறுவதும் சாப்பிடுவதும் வழக்கம் என்றாலும், இனிப்பு வகைகளை நுகரும் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் சிலர், சர்க்கரை உணவுகளுக்குப் பதிலாக, முந்திரி, பாதாம், வேர்க்கடலை போன்ற உப்பில்லா உலர் பழங்களுக்கு மாறியிருப்பது நல்ல அறிகுறி என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.