இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஃபேஸ்புக் ஷார்ட்ஸ் போன்ற குறுங்காணொளிகளைப் பார்ப்பது நீண்டகால நோக்கில் கண்களின் நலனைப் பாதிக்கும் என்று கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உலக அளவில் 200 கோடிப் பேர் இன்ஸ்டாகிராம் செயலியைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் சுமார் 73 கோடிப் பேர் இன்ஸ்டா ரீல்ஸ்களை அதிகமாகக் காண்கின்றனர். இன்ஸ்டா பயனர்கள், செயலியைப் பயன்படுத்தும் 50 சதவீத நேரத்தை ரீல்ஸ் பார்ப்பதில் செலவிடுவதாக மெட்டா நிறுவனம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. இந்நிலையில் கண்கள் உலர்ந்துபோவது, கிட்டப்பார்வை, மாறுகண் போன்ற பிரச்சினைகள் இளைஞர்களிடையே அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ரீல்ஸ் உள்ளிட்ட குறுங்காணொளிகள் பளிச்சென்ற ஒளி அமைப்புகளுடனும் வேகமாக நகரும் காட்சிகளுடனும் படம்பிடிக்கப்படுகின்றன. இத்தகைய அம்சங்கள், பார்வையாளர்கள் இவற்றை நீண்டநேரம் பார்க்கத் தூண்டுகின்றன. குறுங்காணொளிகளை நீண்ட நேரம் பார்ப்பதால், கண்களைச் சிமிட்டும் விகிதம் 50 சதவீதம் குறைவதாகவும், இதன்மூலம் கண்ணீர் சுரப்பு பாதிக்கப்பட்டு கண்கள் உலர்வடையும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.