நீரிழிவு நோயைக் கண்டறிவதில் வெறும் குளுக்கோஸ் அல்லது ஹெச்பிஏ1சி (HbA1c) ரத்தப் பரிசோதனைகள் மட்டுமே இனி முழுமையான தீர்வாகாது என்று நீரிழிவு நோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வெறும் ரத்தச் சர்க்கரை அளவை மட்டும் நம்பியிருப்பது, உடலில் ஏற்கெனவே வளர்சிதை மாற்றப் பாதிப்புகள் ஏற்பட்டபிறகே நோயைக் காட்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது நீரிழிவு நோய் என்பது வகை 1, 2 ஆகியவற்றைத் தாண்டி, அல்சைமர் நோயுடன் தொடர்புடைய வகை-3, முதியவர்களுக்கான வகை-4 மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் வகை-5 எனப் பல வடிவங்களாக உருவெடுத்துள்ளது.
கல்லீரலில் கொழுப்பு படிதல், அடிவயிற்றுக் கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடு (Triglyceride) அளவுகள் ஆகியவை வருங்கால நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கான முக்கியக் குறிகாட்டிகளாக மாறியுள்ளன. இதனைக் கண்டறிய 'தொடர் குளுக்கோஸ் கண்காணிப்பு கருவி', கண்களைப் பரிசோதிக்கும் 'ரெட்டினல் ஏஐ ஸ்கேன்' (Retinal AI Scan) மற்றும் 'ஹோமா-ஐஆர்' (HOMA-IR) போன்ற மேம்பட்ட ரத்தப் பரிசோதனைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும், புனே பி.ஜே (BJ) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், 720 கிராம் எடையில் பிறந்த ஒரு குழந்தைக்கு நடத்திய மரபணு சோதனை மூலம், 'நியோநேட்டல் (Neonatal) டயாபடீஸ் (Diabetes) மெலிட்டஸ் (Mellitus)' என்ற அரிய வகை நீரிழிவு நோயைக் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம், துல்லியமான சிகிச்சைக்கு மரபணு சோதனைகளும் இன்றியமையாதவை எனத் தெரியவந்துள்ளது.