ஹெல்த்

Multi Organ Failure கூட நடக்கும்... எச்சரிக்கும் மருத்துவர் #Toxic Epidermal Necrolysis

Sinekadhara

உடலில் சூடான எண்ணெய் அல்லது தண்ணீர் அல்லது தீக்காயம் ஏற்பட்டால் தோல் வெந்து உரிந்து அந்த இடமே ரணமாகிவிடும். காயம் ஆறினாலும் அந்த தழும்பு அப்படியே இருக்கும். இதுபோன்ற வெளிப்புற காரணிகளால் தோல் பிரச்னை ஏற்படுவது நமக்கு தெரிந்ததே. ஆனால் உடலில் ஏற்படும் வேறு பிரச்னைக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளே, ஒவ்வாமையாக மாறி தோலில் காயத்தை ஏற்படுத்தும் என்றால் அதை நம்பமுடிகிறதா?

அரிதாக ஏற்படும் இந்த ஒவ்வாமையைத்தான் Toxic Epidermal Necrolysis என்று அழைக்கின்றனர். பொதுவாக சருமத்தில் ஏற்படும் பிற ஒவ்வாமைகளைப் போன்றே அரிப்பு, கொப்புளங்கள் என தொடங்கி சருமம் முழுவதும் பரவி தோல் முழுவதும் தீயால் வெந்துபோனது போன்ற காயத்தை ஏற்படுத்திவிடும். இது சருமத்தில் தொடங்கி உள் உறுப்புகள் வரை பாதித்து உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும். இந்த நோயின் தீவிரம் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

கோவையில் டாக்சிக் எபிடெர்மெல் நெக்ரோலைசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் தோல் உரிந்த நிலையில் வந்த நபரை  கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் குணப்படுத்தி அசத்தியுள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் நிர்மலா கூறுகையில், சிலருக்கு எபிடெர்மல் என்று சொல்லக்கூடிய சருமத்தின் மேற்புற அடுக்கானது தீயால் வெந்தது போன்று முழுவதும் உரிந்துவிடும். சிலருக்கு இந்த பாதிப்பு குறைவாகவும், சிலருக்கு அதிகமாகவும் இருக்கும். இது மருந்து மாத்திரைகளால் ஏற்படக்கூடிய ஒவ்வாமையால் வருகிற ஒருவித வியாதி என்று சொல்லலாம். மருந்து மாத்திரைகளால் வரக்கூடிய பிரச்னை என்று தெரியாமல் அதற்கும் ஒரு மருந்து என அதிகமாக சாப்பிட்டால் பிரச்னையும் அதிகமாக இருக்கிறது. இந்த டாக்சிக் எபிடெர்மல் நெக்ரோலைசிஸ் 13% அளவிற்கு சருமத்தை பாதிக்கிறது. 

இதேபோல் ’ஸ்டீவன் ஜான்சன் சிண்ட்ரோம்’ என்று சொல்லக்கூடிய மற்றொரு ஒவ்வாமையும் இருக்கிறது. இது சருமத்தின் 10% குறைவான பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுவே சருமத்தில் பாதிப்பு சதவீதம் அதிகரித்தால் மிகவும் ஆபத்தை விளைவிக்கும். சரும பாதிப்பு தொற்றாக மாறும்போது அதை septicemia  என்று சொல்லுவர். அதாவது கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிடும். இதனால் Multi Organ Failure என்று சொல்லக்கூடிய உடலிலுள்ள பல்வேறு உறுப்புகள் செயலிழக்கும் நிலைகூட ஏற்படலாம். இதனால் மரணம் நிகழும். எனவே மருந்து மாத்திரை ஒவ்வாமையை உடனடியாக நிறுத்தவேண்டும். மருத்துவரிடம் சிகிச்சைக்காக செல்லும்போது கூட நமக்கு ஏதேனும் மாத்திரைகளால் அலர்ஜி ஏற்பட்டிருந்தால் அதை தெளிவாக கூறவேண்டும். எதுவும் கூறாமல் ஒவ்வாமை அதிகரிக்கும்போது மருத்துவர் தவறான மருந்தை கொடுத்துவிட்டார் என்று குறைகூறுவதில் பிரயோஜனமில்லை.