கல்லூரி செல்கின்ற மாணவர்களில் தொடங்கி பள்ளிக்கூடும் செல்கின்ற மாணவர்கள் வரையிலும் ’தலைக்கு எண்ணெய் வைச்சுட்டு போங்கப்பா’ என்று சொன்னால்.. ’ம்ம்ம்..ம்ம்ம் .. என்னால முடியாதுப்பா’ என்று ஒரே வாக்குவாதம்தான்.
சரி தினமும் தலைக்கு எண்ணெய் கட்டாயம் வைத்தே ஆகணுமா? எண்ணெய் வைப்பது முடி வளர்வதற்கு உதவுமா? அப்படி வைக்கவில்லை என்றால் என்ன பிரச்னைகள் வரும்?.. இதுகுறித்து விளக்குகிறார் தோல் நிபுணர் மருத்துவர் வந்தனா மனோகரன்.
தினமும் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம், நமது தலையிலேயே இயற்கையாகவே என்ணெய் சுரக்கிறது. இதுவே ஹைட்ரேஷனுக்கு போதுமானது.
அதிகமாக எண்ணெய் வைக்கும்பொழுது இதனால் வரும் பிரச்னைகள்தான் அதிகம். அதிக எண்ணெய் வைத்து வெளியில் சுற்றுவதால்.. வெளியில் இருக்கும் தூசிகள் அனைத்தும் நமது தலைமுடியில்தான் இருக்கும். இவை தலையில் உள்ள துளைகளை அடைத்துக்கொள்வதால் பொடுகு போன்ற பிரச்னைகளும் வரலாம். ஆகவே, வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை தலைக்கு எண்ணெய் வைத்தால் போதுமானது.
யாராக இருந்தாலும் தினமும் கட்டாயமாக தலையில் எண்ணெய் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால், சிலருக்கு இயற்கையாகவே Dry scalp களும், தலைமுடி உடைந்த நிலையிலும் காணப்படும். அதேபோல, வறண்ட சூழலில் இருப்பவர்களுக்கும் முடி எளிதாக வறண்டு விடும்.
இவர்கள் வறட்சியை கட்டுப்படுத்த நுனிமுடியில் மட்டும் எண்ணெய் வைத்துக்கொண்டால் போதுமானது.
எண்ணெய் வைக்கவில்லை என்றால் எந்த தீங்கும் ஏற்பட போவதில்லை. எண்ணெய்யால் முடியும் வளரப்போவதில்லை. எண்ணெய் வைப்பது முடியை கூடுதலாக ஆரோக்கியமாகவும் , கண்டிஷனிங்காகவும் வைத்துக்கொள்ள உதவும். இதனை காரணமாக வைத்து எண்ணெய்யை உபயோகிக்கலாமே தவிர.. வைக்காவிட்டால் முடி கொட்டப்போவதும் இல்லை. நமது உடலிலேயே தேவையான அளவு எண்ணெய் சுரப்பதால் எண்ணெய் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
பொடுகுதொல்லை இருப்பவர்கள் எண்ணெய் வைக்கலாமா என்றால், இது விவாதத்தை ஏற்படுத்தக்கூடிய கேள்விதான் இது. காரணம்: எந்த எண்ணெய் வைக்கிறோம் என்பதை பொறுத்தும், எவ்வளவு வைக்கிறோம் என்பதை பொறுத்தும் இது மாறுபடும்
உதாரணமாக, இயற்கையாகவே நமது தலையில் சுரக்கும் fatty acid ஐ உண்டுதான் malathion என்னும் ஈஸ்ட் வளர்கிறது. இதனால்தான் பொடுகு ஏற்படுகிறது.
மாறாக, நாம் உபயோகிக்கும் தேங்காய் எண்ணெய்யில் இந்த குறிப்பிடத்தக்க fatty acid என்பது குறைவாக இருக்கும் அல்லது இல்லாமலும் இருக்கும். மேலும், தேங்காய் எண்ணெய்யில் லாரிக் ஆசிட் இருக்கிறது. இது malathion என்னும் ஈஸ்ட்டை வளரவிடாது.. அதேசமயம் இயற்கையாகவே antifungal property தேங்காய் எண்ணெய்க்கு இருப்பதால், ஈஸ்ட் வளர்ச்சியை இது தடுக்கும்.
அதேசமயம் அதிகளவு தேங்காய் எண்ணெய்யை உபயோகப்படுத்தினால், இது வேறு வகையான பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆக, தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம், ஆனால், அளவிற்கு மீறி பயன்படுத்தக்கூடாது. ஆலிவ் ஆயில் போன்ற வேறு எண்ணெய்களை உபயோகிப்பது பொடுகுபிரச்னையை ஏற்படுத்தும்.
1 - 2 மணி நேரத்திற்கு தலைக்கு எண்ணெய் வைத்தால் போதுமானது. ஆராய்சிகளின்படி, நாம் வைக்கும் எண்ணெய் என்பது 1 மணி நேரத்திலேயே முடியினுள் ஊடுவி சென்றுவிடும். அதற்கு மேலாக எண்ணெய்யை வைத்தால், அது வெளியில் சுற்றித்திரியும் தூசுக்களைதான் தலையில் சேரவிடும்.
ஆக, இரவு நேரத்தில் தலையில் எண்ணெய் வைத்து காலையில் குளிப்பது, வெளியில் சுற்றுவது போன்றவற்றை செய்வது தலைமுடிக்கு பிரச்னைதான்.
எண்ணெய் வைத்தால் தலைமுடி பிரச்னை தீர்ந்துவிடும் என்று கூறுவதுதான் முதல் மூடநம்பிக்கை. காரணம்: எண்ணெய் வைப்பது முடியை வறட்சியிலிருந்து மீட்டு, கண்டிஷனிங்காக வைத்திருக்கும். ஆனால், இது முடி உதிர்வை தடுக்காது. முடி உதிர்வு என்பது மரபணு, ஹார்மோன் குறைப்பாடு, மருத்துவ காரணங்களால் ஏற்படக்கூடிய ஒன்று. எனவே, என்ன காரணம் என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறுதான் சிகிச்சை பெற வேண்டும்.
தினமும் எண்ணெய் வைப்பது முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பது முழுவதும் பொய்யான தகவல். எதுவாக இருந்தாலும் அளவாகதான் உபயோகிக்க வேண்டும்.
கண்டிப்பாக இல்லை. எண்ணெய் வைக்கவில்லை என்றாலும் தலைமுடி வளரும். தலைமுடியின் வளர்ச்சிக்கும், அடர்த்திக்கும் மரபணுக்கள் முக்கிய காரணம். மேலும், ஊட்டசத்துக்களும் முக்கிய பங்கு வைக்கிறது. புரோட்டீன், அயன், வைட்டமின்கள் பி, பி12, ஜிங்க், பயோட்டின், போன்ற அடிப்படையான சத்துக்கள் சரியான அளவில் நமது உடலில் இருக்கிறதா? என்பதை பார்க்கவேண்டும்.
தலையை சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் இருப்பது,ஹார்மோன் குறைப்பாடு போன்றவை தலைமுடி வளர்ச்சியை தடுக்கும்.
மற்றப்படி, எண்ணெய் வைக்கும்போது செய்யப்படும் மசாஜ், ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது, முடி வளர்வதை சற்று அதிகமாகும்.