எம்.பி கனிமொழி முகநூல்
ஹெல்த்

செர்லாக்கில் கூடுதல் சர்க்கரை? கேள்வி எழுப்பிய எம்.பி! மருத்துவர் சொல்லும் விளக்கம் என்ன?

இந்நிலையில், குழந்தைகளின் உணவில் சர்க்கரை சேர்ப்பது எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து நீரிழிவு மருத்துவர் ராஜ்குமாரிடம் கேட்டோம் .

ஜெனிட்டா ரோஸ்லின்

குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த நெஸ்லே நிறுவனம் தவறியதைக்குறித்து எம்.பி.கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவில், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவாக விற்கப்படும் நெஸ்லே செர்லாக்கின் ஒரு கரண்டி மாவில், 2.7 கிராம் சர்க்கரை இருப்பதாகவும், அதுவே இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் சர்க்கரை சேர்க்கப்படாமல் விற்கப்படுவதாகவும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன்.

குழந்தைகளுக்கு இளவயதில் உடல்பருமன் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுக்கு உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை வழிவகுக்கும் என்பதால், இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உணவில் சர்க்கரை சேர்க்கக்கூடாது என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலை நெஸ்லே நிறுவனம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, இதுபோன்று குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உலகளாவிய சுகாதாரப் பரிந்துரைகளுக்கு இணங்க, குழந்தைகள் உணவுத் தயாரிப்பிற்கான தரநிலையை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழந்தைகளின் உணவில் சர்க்கரை சேர்ப்பது எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து நீரிழிவு மருத்துவர் ராஜ்குமாரிடம் கேட்டோம் .

நீரிழிவு மருத்துவர் ராஜ் குமார்
இது குறித்து மருத்துவர் தெரிவிக்கையில்,

American Academy of Pediatrics and WHO அறிவுறுத்தலின் படி, குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை, சர்க்கரையை கொடுக்க கூடாது.

காரணம், குழந்தைகள் சாப்பிடும், பழங்கள் , காய்கறிகளில் இருக்கும் சர்க்கரையே போதுமானது. இரண்டு வயதுக்கு மேலே சர்க்கரையை கொடுக்கலாம். 2- 18 வயது வரையிலும் சாப்பிட வேண்டிய அளவு 25 கிராம் . அதாவது 6 டீஸ்பூன் சர்க்கரை வரையிலும் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

சிறுவயதிலிருந்து சர்க்கரை எடுத்துக்கொண்டால் உடல்பருமன் பிரச்னை ஏற்பட வாய்ப்பு அதிகம்.இதனால், மேலும்,பல் சொத்தை போன்றவையும் ஏற்படும்.

அதுமட்டுமல்ல.. தவறான உணவுமுறை, குறைவான உடற்பயிற்சி, மன அழுத்தம் இவை அனைத்தும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணம். உடல் பருமன் மேலும், பல பிரச்னைகளை உண்டாக்கும்.

நீரிழிவு நோய், ஹைப்பர் டென்ஷன், கொலஸ்ட்ரால், மூட்டுத்தேய்மானங்கள், வயது வருவதில் பிரச்னை, வயது வந்த பிறகும் ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள், குழந்தையின்மை, பித்தப்பைகல் என்று நிறைய பாதிப்புகள் ஏற்படும். ஆகவே, சிறுவயதிலிருந்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, நல்ல உடற்பயிற்சிகளை மேற்கொள்வது பிற்காலத்தில் ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.