Dementia
Dementia  
ஹெல்த்

அடிக்கடி மறந்துபோகிறதா? அப்போ உங்களுக்கு இந்த பிரச்னையாக இருக்கலாம்! #Dementia

Snehatara

நினைவுகள், சிந்தனை, நடத்தை, கற்றல் திறன், மொழி மற்றும் அன்றாட செயல்பாடுகளைச் செய்யும் திறன்களை பாதிக்கும் ஒரு நோய்தான் டிமென்ஷியா(Dementia).

இது பெரும்பாலும் வயதானவர்களையே பாதித்தாலும், வயதுடன் தொடர்புடையது அல்ல. டிமென்ஷியா அன்றாட வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போதைய நவீன வாழ்க்கையின் ஒரு பகுதியாக டிமென்ஷியா மாறிவிட்டது என்றே சொல்லலாம். உலகளவில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வருடந்தோறும் 10 மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

டிமென்ஷியா பெரும்பாலும் 60 -70% பேரிடம் அல்சைமர் என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. காரணம் அல்சைமர் அல்லது பக்கவாதம் போன்ற மூளையை பாதிக்கும் பலவிதமான நோய்களால் மற்றும் தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களால் டிமென்ஷியா ஏற்படுகிறது.

Dementia

இதனால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை மற்றும் ஆளுமைகளில்கூட மாற்றத்தை காணமுடியும். வயதாக ஆக டிமென்ஷியாவின் தாக்கமும் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். 85 வயதுக்கும் மேற்பட்டவர்களில் மூன்றில் ஒருவருக்கு டிமென்ஷியா தாக்கம் இருப்பதாகக் கூறுகின்றனர் மருத்துவ வல்லுநர்கள். அதேசமயம் வயதானவர்களுக்கு டிமென்ஷியா பிரச்னை வரலாம் என்ற கருத்தும் தவறு என்கின்றனர்.

மூளை நரம்பு செல்கள் சரிவர இயங்காததால், அவை மூளையின் மற்ற செல்களுடன் இணைந்து செயல்படாமல் போவதால் டிமென்ஷியா ஏற்படுவதாகக் கூறுகின்றனர் நிபுணர்கள். வயதாகும்போது நியூரான்களின் எண்ணிக்கை குறைந்து அவற்றின் திறன்கள் மோசமடைவது இயற்கையானதுதான் என்றாலும், டிமென்ஷியா இந்த நரம்பு செல்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.

Dementia 2

டிமென்ஷியாவின் அறிகுறிகள்

டிமென்ஷியாவின் வகையை பொறுத்து அதன் அறிகுறிகளும் மாறுபடும் என்கிறது US National Institute on Aging. இருப்பினும் சில பொதுவான அறிகுறிகள்...

  • பேசுதல், புரிதல் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிரமம்

  • ஞாபக மறதி, குழப்பம் மற்றும் தீர்வு எடுக்க முடியாமை

  • எழுதுவது, படிப்பதில் சிரமம்

  • பழகிய இடங்கள் மற்றும் வழிகளை மறத்தல்

  • தினசரி வேலைகளை முடிப்பதில் சிரமம்

  • பிறருடைய உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க இயலாமை

  • மனக்கிளர்ச்சி மற்றும் அசாதாரண நடத்தை

  • உடல் மற்றும் மனதை சமநிலைப்படுத்துவதில் சிரமம்

  • சித்தபிரமைகள்

  • பணம் மற்றும் பில்களை செலுத்த முடியாமை

  • நேரம், இடம் போன்றவற்றை புரிந்துகொள்வதில் குழப்பம்

டிமென்ஷியாவின் பொதுவான வடிவங்கள்

டிமென்ஷியா என்பது அறிவாற்றல் சார்ந்த பிரச்னைகள் ஒன்றிணைந்தது. மனநிலை, ஆளுமை மாற்றம், நினைவாற்றல், சிந்தனை மற்றும் தொடர்பு ஆகியவற்றின்மீது தாக்கம் ஏற்படலாம்.

அல்சைமர்

வாஸ்குலார் டிமென்ஷியா

கலப்பு டிமென்ஷியா

லூயி உடல் டிமென்ஷியா போன்றவை டிமென்ஷியாவின் பொதுவான வடிவங்கள்

Dementia

டிமென்ஷியாவின் காரணிகள்

மூளையின் சில பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களால் நியூரான்கள் அல்லது நரம்பு செல்கள் இறந்துவிடுவதால் அல்லது அதன் செயல்திறன் நிறுத்தப்படுவதால் டிமென்ஷியா வருவதாக கூறுகின்றனர் நிபுணர்கள். டிமென்ஷியாவின் சில வடிவங்களுக்கும் மூளையின் சில பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இருப்பினும், டிமென்ஷியாவை தடுக்க சரியான வழி இன்னும் கண்டறியப்படவில்லை என்கின்றனர். எனினும், வாழ்க்கைமுறை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது டிமென்ஷியா தாக்கத்தை குறைக்க உதவும் என்கின்றனர்.