சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ’டூ இட் யுவர்செல்ஃப்’ (Do it yourself) எனப்படும் சுய மருத்துவ முறைகளைப் பின்பற்றி, மச்சங்களை வீட்டிலேயே வெட்டி எடுப்பதோ அல்லது எரிப்பதோ உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீங்கள் மச்சம் என்று நினைக்கும் ஒரு சிறிய தழும்பு முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருக்கலாம். முகப்பரு, தடிப்புத்தோல் அழற்சி அல்லது தோல் நீர்க்கட்டிகள் போன்ற புற்றுநோயற்ற நிலைகளிலிருந்து, 'மெலனோமா' (Melanoma) எனப்படும் தீவிர தோல் புற்றுநோயின் அறிகுறி வரை இருக்கலாம். எனவே அதை நீங்களே சிதைக்கும்போது, புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது.
சில மச்சங்கள் இரத்தநாளங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருப்பதால் அதை வெட்டும்போது கட்டுப்படுத்த முடியாத இரத்தப்போக்கு ஏற்படலாம். மேலும், சுத்திகரிக்கப்படாத கருவிகளைப் பயன்படுத்துவதால் கடுமையான பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, முகத்தில் நிரந்தரமான தழும்புகளை உண்டாக்கும் வாய்ப்புகளும் உள்ளது. எனவே, மச்சம் திடீரென கருப்பாக மாறினாலோ, அரிப்பு ஏற்பட்டாலோ அல்லது அளவு அதிகரித்தாலோ உடனடியாக தோல் மருத்துவரை அணுக வேண்டும். அதன்பின்னரே அது சாதாரண மச்சமா அல்லது புற்றுநோயா என்பதைக் கண்டறிந்து, பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும். ஆகையால், சமூக வலைதளத்தில் கூறுபவற்றை நம்பி ஆரோக்கியத்தைச் சிதைத்துக் கொள்ளாதீர்கள் என்பதே மருத்துவர்களின் அறிவுரை.