Diabetes web
ஹெல்த்

சர்க்கரை | பரிசோதனைக்கு முன் பட்டினி இருக்கச் சொல்வது ஏன்?

ரத்தச் சர்க்கரை பரிசோதனைக்கு முன் 8–12 மணி நேரம் மட்டுமே உணவு தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் நினைவூட்டுகின்றனர்.

PT WEB

ரத்தச் சர்க்கரை அளவு பரிசோதனைக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டதைவிட அதிக நேரம் சாப்பிடாமல் இருப்பதால் பரிசோதனை முடிவு மாறுமா என்ற கேள்விக்கு நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பொதுவாக ரத்தச் சர்க்கரை பரிசோதனை செய்துகொள்வதற்கு முன்பு 8 முதல் 12 மணி நேரம் வரை மட்டுமே உணவருந்தாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உணவு இல்லாத நேரத்தில் உடல் குளுக்கோஸை எப்படிக் கையாள்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவே இந்த நேர அளவு பரிந்துரைக்கப்படுகிறது.

file image

ஒருவேளை, அதைத் தாண்டி 13 மணி நேரம் வரை சாப்பிடாமல் இருந்தால் பரிசோதனை முடிவில் சிறிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடல் உணவில்லாமல் இருக்கும் காலம் அதிகரிக்கும் போது, மூளை உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டிற்குத் தேவையான ஆற்றலை வழங்க, கல்லீரல் தன்னிடம் சேமித்து வைத்துள்ள குளுக்கோஸை ரத்தத்தில் வெளியிடும். இதனால் சிலருக்கு ரத்தச் சர்க்கரை அளவு சற்று உயரக்கூடும்.

எனினும், 13 மணி நேர இடைவெளி பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால், இந்த முடிவை மருத்துவ ஆலோசனைகளுக்குப் பயன்படுத்தலாம். இருப்பினும், எதிர்காலப் பரிசோதனைகளின் துல்லியமான ஒப்பீட்டிற்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட நேர இடைவெளியைக் கச்சிதமாகப் பின்பற்றுவதே சிறந்தது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.