Common Medicines Chat Gpt
ஹெல்த்

வலி நிவாரணிகளும் ரத்த அழுத்த அதிகரிப்பும்.. அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகளில் கவனம் தேவை!!

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அன்றாடம் பயன்படுத்தும் சில பொதுவான மருந்துகள் ரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்யலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Premkumar S

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினசரி உபயோகிக்கும் சில எளிய வலி நிவாரணிகள், சளி மருந்துகள் உள்ளிட்டவை ரத்த அழுத்தத்தைக் கட்டுக்கடங்காமல் உயர்த்தும் ஆபத்தைக் கொண்டுள்ளன. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ரத்த அழுத்த மருந்துகளைத் தவறாமல் சாப்பிட்டு வந்தாலும், கடைகளில் சுயமாக வாங்கிப் பயன்படுத்தும் ஐபுபுரூஃபன் டைக்ளோஃபெனாக் மற்றும் நாப்ராக்ஸன் போன்ற வலி நிவாரணிகள் சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிப்பதோடு ரத்த அழுத்தத்தையும் உயர்த்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

model image

குறிப்பாக, சிறுநீரகத்தில் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து ரத்த ஓட்டத்தை சீராக்கும் சைக்ளோஆக்சிஜனேஸ் என்சைம்கள் மற்றும் புரோஸ்டாக்ளான்டின் சுரப்பைத் தடுக்கின்றன. இதனால் சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் குறைந்து சராசரியாக சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் 3 முதல் 6 mmHg வரை உயர்ந்து, இதயச் செயலிழப்பு ஏற்படும் ஆபத்தை 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோன்று, சளி மாத்திரைகளில் உள்ள சூடோபெட்ரின் ரத்த நாளங்களின் ஆல்ஃபா-1 அட்ரினெர்ஜிக் ரிசிப்டர்ஸை தூண்டி ரத்த நாளங்களை சுருக்குகிறது. மேலும், நெஞ்செரிச்சலுக்காகப் பயன்படுத்தப்படும் சோடியம் கலந்த அமில எதிர்ப்பு மருந்துகள், அதீத காஃபின் கொண்ட எனர்ஜி பானங்கள் ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தை மேலும் அதிகாரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே கடைகளில் சாதாரணமாக கிடைக்கும் வலிநிவாரணிகளை உட்கொள்வதற்கு முன்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவதுடன், தாமாக ரத்த அழுத்த மாத்திரைகளை நிறுத்தவோ குறைக்கவோ கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.