ஹெல்த்

பெருமூளை வாதம் நோயின்அறிகுறிகள்.. காரணங்கள் மற்றும் வகைகள்

Sinekadhara

உடல் தசைகளின் ஒட்டுமொத்த இயக்கத்திலும் ஏற்படும் பாதிப்பு பெருமூளை வாதம் (Cerebral Palsy). மூளை சரியான வளர்ச்சி அல்லது முதிர்ச்சி அடையாததால் குழந்தை பிறக்கும்முன்பே ஏற்படக்கூடிய பிரச்னை இது. இதனால் நிறையப்பேருக்கு பார்க்கும், கேட்கும் மற்றும் உணரும் திறனில்கூட பாதிப்புகள் ஏற்படலாம்.
அறிவு வளர்ச்சியில் பெரும்பாதிப்பு இருக்காது. மூட்டுகள் திடீரென அசைதல் (அசாதாரண அனிச்சை செயல்) அல்லது விறைப்பாக இருத்தல், நடப்பதில் சிரமம் இருத்தல் போன்றவை சாதாரணமாகக் காணப்படும் அறிகுறிகள். ஆனால் வயது ஆக ஆக நல்ல முன்னேற்றம் தெரியும்.


அறிகுறிகள்

  • குப்புறப் படுத்தல், தவழ்தல், தனியாக அமருதல் போன்ற செயல்பாட்டுத் திறன்கள் தாமதமாதல்
  • மிகவும் நெகிழ்வாக அல்லது கடினமாக இருத்தல் போன்ற தசைகளில் மாறுபாடு
  • வாய்பேசுவதில் தாமதமாதல் அல்லது சரியான உச்சரிப்பு வராமல் போதல்
  • தசைகளில் ஒருங்கிணைப்பு இல்லாமை
  • தள்ளாட்டம் மற்றும் தேவையில்லாத உடல் இயக்கங்கள்
  • அதிகப்படியாக உமிழ்நீர் வருதல் மற்றும் விழுங்குவதில் சிரமம் இருத்தல்
  • நடப்பதில் தாமதம் ஏற்படுதல்
  • உடலில் ஏதேனும் ஒரு பக்கம் மட்டும் அதிகமாக செயல்படுதல்.
  • வலிப்பு, அறிவுசார் குறைபாடுகள் மற்றும் பார்வைக் குறைபாடு போன்ற நரம்பு சார்ந்த பிரச்னைகள்

காரணங்கள்

  • அசாதாரண மூளை வளர்ச்சி அல்லது ஏதேனும் காயம் ஏற்பட்டால் பெருமூளை வாதம் வரும் வாய்ப்புகள் அதிகம். இதனால் பெருமூளையில் தாக்கம் ஏற்பட்டு உடலின் இயக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் உடல் அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • குழந்தைப் பிறப்பின்போது மூச்சுத்திணறல் அல்லது மூளைக்குக் குறைவான ஆக்ஸிஜன் கிடைத்தல்
  • மரபணு மாற்றங்கள்
  • குழந்தைக்கு தீவிர மஞ்சள் காமாலை இருத்தல்
  • கர்ப்பக்காலத்தில் தாய்க்கு அம்மை அல்லது ஏதேனும் தொற்று இருத்தல்
  • என்சிபாலிட்டிஸ் மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற மூளைத்தொற்றுகள் ஏற்படுதல்
  • மூளை அல்லது மூளையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்படுதல்
  • விபத்து ஏற்பட்டு தலையில் அடிபடுதல்

பெருமூளை வாத வகைகள்
ஸ்பாஸ்டிக் (Spastic CP) 
பெரும்பாலானவர்கள் (80 சதவீதம் பேர்) இந்த வகையால்தான் பாதிக்கப்படுகிறார்கள். தசைகள் இறுக்கமாகி, அளவுக்கதிகமான அனிச்சை செயல்கள் நடைபெறும். இந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடப்பதில் சிரமம் இருக்கும்.


டிஸ்கனெட்டிக் (Dyskinetic CP)
இந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் உடல் அசைவுகளை கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படுவர். விருப்பமில்லாத மற்றும் அசாதாரண அசைவுகள் தோள்ப்பட்டை, கைகள் மற்றும் கால்களில் காணப்படும்.
சிலருக்கு முகம் மற்றும் நாக்கும் பாதிப்புக்குள்ளாகும். அசைவுகள் மெதுவாக தள்ளாட்டமாகவோ அல்லது வேகமாக செயற்கையாகவோ இருக்கும். இதனால் நடப்பதில், அமருவதில், சாப்பிடுவதில், விழுங்குவதில் சிரமம் இருக்கும்.


ஹைபோடோனிக் (Hypotonic CP)
உடலின் தசைகள் மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் இறுக்கமில்லாமல், தளர்வாக இருக்கும். கைகளும் கால்களும் துணியால் செய்த பொம்மைபோன்று காணப்படும்.
குழந்தைகளுக்கு தலை சற்று கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஆனால் மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும். வளர வளர பாதிக்கப்பட்டவர்களுக்கு நேராக அமருவதில் சிரமம் இருக்கும். இவர்களுக்கும் சரியாக பேசமுடியாமை, அனிச்சை செயல்கள் மற்றும் சரியாக நடக்க முடியாமல் போதல் போன்ற பிரச்னைகள் இருக்கும்.


ஏடாக்ஸிக் (Ataxic CP)
ஒருசிலர் மட்டுமே இந்த வகையால் பாதிக்குள்ளாகின்றனர். இதில் ஒழுங்கற்ற, சம்பந்தமில்லாத, தள்ளாட்டாமான தசை அசைவுகள் ஏற்படும். இந்த வகை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடலை ஒருங்கிணைத்து சமநிலைப்படுத்த சிரமப்படுவர்.
நடக்கும் திறன், பொருட்களை அடையாளம் காண்பது, எழுதுவது போன்ற செயல்பாட்டுத் திறன்கள் சரிவர இல்லாமல் சிரமப்படுவர்.


எப்படி தடுப்பது?

  • கருவுற்றிருக்கும் தாய்மார்கள் முறையான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது அவசியம்.
  • எந்தவொரு நோய்த்தொற்றும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • கருவுற்றிருக்கும் சமயம் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரை அணுகி, முறையான ஆலோசனைகள் பெறுவது அவசியம்.
  • கருவுற்றிருக்கும் பெண் பயணங்களில் கவனமாக இருக்கவேண்டும். எந்தக் காரணத்தைக்கொண்டும் அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • கருவுற்றிருக்கும் பெண்கள் ஆல்கஹால், புகையிலை மற்றும் பிற போதை வஸ்துக்களை தவிர்க்கவேண்டும்.

எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?
குழந்தை வளருவதில் சிரமம் ஏற்பட்டாலோ அசைவுகளில் மாற்றம் தெரிந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்று உரிய சிகிச்சைகள் கொடுப்பது அவசியம்.