ரத்தப்போக்கு கண் வைரஸ் முகநூல்
ஹெல்த்

‘ரத்தப்போக்கு கண் வைரஸ்’ - புது வகை வைரஸால் ருவாண்டாவில் 15 பேர் மரணம்! வெளியான அதிர்ச்சி தகவல்

ரத்தப்போக்கு கண் வைரஸ் என்ற அழைக்கப்படும் புதியவகை வைரஸால் உலகளாவிய அளவில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மார்பர்க் அல்லது ரத்தப்போக்கு கண் வைரஸ் என்றழைக்கப்படும் ஒரு புதிய வகை வைரஸால் ஆப்பிரிக்காவில் உள்ள ‘ருவாண்டா’வில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் இன்னும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

உலகின் 17 நாடுகளில் மார்பர்க், mpox, orpouche போன்ற வைரஸ்கள் பரவி வருவதால், அதிகம் பயணப்படுபவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மார்பர்க் அல்லது ரத்தப்போக்கு வைரஸ் என்றால் என்ன?

மார்பர்க் வைரஸ் என்பது ஒரு கடுமையான நோயாகும். இது ‘எபோலா’ குடும்பத்தைச் சேர்ந்தது. இது வைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு 50 சதவீதம் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், இது மிகவும் கொடிய வைரஸ்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இது பழம் உண்ணும் வௌவால்களிடமிருந்து உருவானதாக கூறப்படுகிறது. இது ரத்தம், உமிழ்நீர் அல்லது சிறுநீர் போன்ற உடல் திரங்களுடன் நேரடி தொடர்புக்கொள்வதால் மனிதர்களுக்கு பரவுகிறது.

இதனால் பாதிக்கப்படுபவர்கள் அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தசைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு தொண்டைப்புண், சொறி சிரங்கு மற்றும் உறுப்பு செயலிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எதிர்பாராத எடை இழப்பு, மூக்கு, கண்கள், வாய் அல்லது இனப்பெருக்க உறுப்புகளில் ரத்தப்போக்கு ஏற்படலாம். இதனால் 24% - 88% வரை இறப்பதற்கான சூழல் என்பது உள்ளது.

இது எபோலா தொற்றுடன் தொடர்புடையது போல தோன்றுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். மருத்துவ கண்காணிப்பைப் பொறுத்தே நலனில் முன்னேற்றம் தீர்மானிக்கப்படுமே தவிர இதற்கான தடுப்பு சிகிச்சை என எதுவும் இல்லை. இதனால் பாதிக்கப்பட்டோருக்கு, உலக சுகாதார அமைப்பு (WHO) சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்துதலை அறிவுறுத்தியிருக்கிறது.