ஹெல்த்

பல் இல்லையே என்று கவலைப்படும் முதியவரா நீங்கள்? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க!

Sinekadhara

முதிர் வயது என்றாலே அவ்வளவு எளிதானதல்ல. உடலில் பல்வேறு பிரச்னைகள் மற்றும் வியாதிகளை முதிர்வயதானோர் சமாளிக்கவேண்டும். அதில் முக்கிய மற்றும் பெரிய பிரச்னையாக இருப்பது பற்களை இழத்தல். பற்கள் உணவுகளை நன்றாக மென்று விழுங்கவும், அதன்மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறவும் உதவியாக இருக்கிறது. வயதாகும்போது பற்களை இழப்பதால் அவர்கள் ஊட்டச்சத்துக்களையும் இழக்கவேண்டும் என்று அவசியமில்லை.

சில எளிய மற்றும் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை அதிகம் மென்றுவிழுங்கவேண்டிய அவசியமில்லை. அதேசமயம் உடலுக்கு தேவையான சத்துக்களையும் அவைகள் வழங்குகின்றன.

1. வேகவைத்த முட்டை: முட்டை புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்தவை. நன்றாக வேகவைத்த முட்டைகள் சாப்பிடுவதற்கு எளிதாகவும், உடலுக்கு போதுமான ஆரோக்கியத்தையும் தரக்கூடியவை.

2. மசித்த உருளைக்கிழங்கு: ஒவ்வொருவருடைய சுவைக்கு ஏற்ப இதை சமைத்து சாப்பிடலாம். வேகவைத்து மசித்த உருளைக்கிழங்குடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்தௌ மேம்படுத்தும். மேலும் இது எளிதில் செரிமானம் ஆகக்கூடியதும் கூட.

3. வேகவைத்த காய்கறிகள்: அனைத்து வயதினருமே தினசரி உணவில் காய்கறிகளை சேர்த்துக்கொள்வது அவசியம். குறிப்பாக பற்கள் இல்லாவிட்டாலும் முதியவர்கள் காய்கறிகளுடன் சிறிது சுவை சேர்த்து நன்றக வேகவைத்து சாப்பிடவேண்டும். தண்ணீரில் போட்டு காய்கறிகளை வேகவைப்பதைவிட, ஆவியில் வேகவைத்த காய்கறிகள் ஊட்டச்சத்துகள் மற்றும் வைட்டமின் இழப்பு ஏற்படாமல் தடுக்கும்.

4. மீன்: ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளில் ஒன்று மீன். மீனிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், போதுமான ஆண்டி ஆக்ஸிடண்டுகளையும் வழங்குகிறது. மற்ற இறைச்சி வகைகளுடன் ஒப்பிடுகையில் மீனை எளிதாக மென்று சாப்பிட முடியும். காட், சால்மன் அல்லது வாள்மீன் போன்றவைகளை வேகவைத்து சாப்பிடலாம்.

5. தயிர்: வயதானாலே லாக்டோஸ் பொருட்கள் செரிக்காது என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் உண்மையில் உடலை மெருகூட்டும் உணவுகளில் சிறந்தது தயிர். மேலும் இதில் புரதங்களும், வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை தூண்டுகிறது. வயதானவர்கள் சுவைக்காக தயிரில் பழங்கள் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து சாப்பிடலாம்.

6. சூப் வகைகள்: சைவ மற்றும் அசைவ உணவுக்காரர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு முக்கிய ஊட்டச்சத்துகள் வழங்குகிறது சூப் வகைகள். இருப்பினும், இவை சுவை மிக்கவை. இவை எளிதாக உண்ணக்கூடியவை மற்றும் செரிக்கக்கூடியதும் கூட.

7. ஓட்ஸ்: ஓட்ஸ் வயிற்றை நிரப்புவதற்கு மட்டுமல்ல, ஊட்டச்சத்து மிக்கதும்கூட. ஓட்ஸ் எளிதில் சாப்பிடக்கூடியவை மற்றும் செரிக்கக்கூடியவை. குறிப்பாக முதியோர்களுக்கு செரிமான பிரச்னை ஏற்படாது.

8. பீன்ஸ்: புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்தவை பீன்ஸ். வயதானவர்களின் செரிமான மண்டலத்தை தூண்டக்கூடியவை பீன்ஸ். சிறிது வேகவைத்தாலே பீன்ஸ் சாஃப்ட்டாகவும் டேஸ்ட்டாகவும் இருக்கும்.