ஹெல்த்

தொடர் இருமல், சளி, காய்ச்சல்... உங்களுக்கும் இருக்கா? அப்போ, இது உங்களுக்குத்தான்!

நிவேதா ஜெகராஜா

தொடர் இருமல், சில நேரங்களில் காய்ச்சல்… இந்தியா முழுக்க கடந்த இரண்டு – மூன்று மாதங்களாக பலருக்கும் இப்பிரச்னை இருக்கிறது. இதற்கு காரணம் Influenza A subtype H3N2 என நிபுணர்கள் தெரித்துள்ளனர்.

ஐ.சி.எம்.ஆர் அளித்துள்ள தகவல்களின்படி, பிற திரிபுகளை காட்டிலும் இந்த H3N2 திரிபு, மக்கள் மத்தியில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிகிறது. இதன் தாக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, மக்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்களை ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைத்துள்ளது. ஐ.எம்.ஏ.வும் இந்த விஷயத்தில் சில பரிந்துரைகளை செய்துள்ளது. அதன்படி ஆன்டிபயாடிக் பயன்பாடுகளை தவிர்க்க ஐ.எம்.ஏ அறிவுறுத்தியுள்ளது.

அதன்விவரங்கள், பின்வருமாறு:

நாட்டில் இருமல், வயிற்றுப்போக்கு, வாந்தி, வறண்ட தொண்டை, காய்ச்சல், மயக்கம், உடல் வலி போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. இந்த அறிகுறிகள் இருப்போருக்கு, அவை பெரும்பாலும் 5 முதல் 7 நாள்கள் வரை நீடிக்கலாம். பெரும்பாலும் மூன்று நாள்களில் அந்த காய்ச்சல் போய்விடும்; இருப்பினும் இருமல் மூன்று வாரம் வரை நீடிக்கலாம். என்.சி.டி.சி வழிகாட்டுதல்படி தெரியவந்தது என்னவெனில், பெரும்பாலானோருக்கு இது இன்ஃப்ளூயென்சா வைரஸால்தான் ஏற்பட்டிருக்கிறது.

அக்டோபர் – பிப்ரவரிக்கு இடைப்பட்ட மாதங்களில் இன்ஃப்ளூயென்சா மற்றும் பிற வைரஸ்களால் பருவகால சளி இருமல் பாதிப்புகள் வருவது இயல்புதான். பெரும்பாலும் இது 15 வயதுக்குட்பட்டோருக்கோ அல்லது 50 வயதுக்கு மேற்பட்டோருக்கோதான் வருகிறது. இது ஏற்பட்டவர்களுக்கு, மேல் சுவாசக்குழாயில் பாதிப்பும் காய்ச்சலும் ஏற்படுகிறது. இதற்கு காற்று மாசுவும் காரணமாக இருக்கலாம்.

சுயமாக ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்கிறார்கள்..

இப்படியான பிரச்னைகளுக்கு தேவை மருத்துவ வழிமுறையுடன் கூடிய தீர்வுதானே தவிர, சுயமாக எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாடிக் அல்ல. சமீபகாலமாக சிலர் சுயமாக Azithromycin and Amoxiclav போன்ற சில ஆன்டிபயாடிக் மருந்துகளை டோசேஜ் அளவை பற்றி யோசிக்காமல் உட்கொள்கின்றனர். கொஞ்சம் உடல் சீரானவுடன் அதை நிறுத்தியும் விடுகின்றனர். இப்படி செய்வதால், உடல் ஆன்டிபயாடிக்கிற்கான எதிர்ப்புத்திறனை பெறத்தொடங்குகிறது. இதனால் உண்மையிலேயே எப்போது ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உடலுக்கு தேவைப்படுகிறதோ, அப்போது உடல் அதை உட்கொள்ளாமல் போகக்கூடும். அதனால் சிக்கல் உண்டாகும்.

அப்படி செய்தால் இந்த விளைவுகள் நிச்சயம்..

மேற்சொன்னவை மட்டுமன்றி, இன்னும் சில ஆன்டிபயாடிக்களும் மக்களால் தவறாக பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்கு வைரல் பாதிப்பால் ஏற்படும் வயிற்றுப்போக்கு பாதிப்புக்கெல்லாம் ஆன்டிபயாடிக் தேவைப்படாது. சில நேரங்களில் மருத்துவர்களாலேகூட மாற்றி பரிந்துரைக்கப்படுகிறது. அதிகம் தவறாக பயன்படுத்தப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகளாக இருப்பவை amoxicillin, norfloxacin, ciprofloxacin, ofloxacin, levofloxacin ஆகியவைதான்.

கோவிட் காலத்தில் அசித்ரோமைசின் மற்றும் ஐவர்மெக்டின் ஆகிய மருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இவை இப்போது பலருக்கும் உடல் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது. ஆகவே ஆன்டிபயாடிக் மருந்துகளில் கவனம் தேவை. பரிந்துரைக்கும் முன், சம்பந்தப்பட்டவருக்கு அந்த தொற்று பாக்டீரியாவால் ஏற்பட்டதா அல்லது வேறு எதனாலுமா என்பதை மருத்துவர், மருத்துவ பணியாளர் கண்டறிய வேண்டும். இவ்விஷயத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

தொற்றுநோய் தாக்குதல்களிலிருந்து தன்னை தானே தற்காத்துக்கொள்ள நெரிசலான இடங்களில் இருப்பதை மக்கள் தவிர்க்கவும்; போலவே கை மற்றும் சுவாச சுகாதாரத்தை கடைபிடிக்கவும். தடுப்பூசி போடவும்” எனக்கூறப்பட்டுள்ளது.