கொரோனா
கொரோனா  ஃபேஸ்புக்
ஹெல்த்

“இப்போதும் பரவுகிறது, இப்போதும் உருமாறுகிறது, இப்போதும் உயிரை கொல்கிறது கொரோனா” - WHO வேதனை!

ஜெனிட்டா ரோஸ்லின்

“டிசம்பர் 2023-ல் மட்டும் கொரோனாவால் உலகளவில் சுமார் 10,000 பேர் இறந்துள்ளனர்; கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலத்தோடு ஒப்பிடுகையில் இது குறைவான எண்ணிக்கைதான் என்றாலும், உயிரிழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்கூட்டியே தடுக்கப்பட்டிருக்க வேண்டியவை இந்த இறப்புகள்” - உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி டெட்ராஸ் அதானோம் நேற்று இவ்வாறு தெரிவித்துள்ளார். இத்தருணத்தில் 2019-ல் இருந்து கொரோனா அடைந்த பல்வேறு மாறுதல்கள், திரிபுகள், அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றியெல்லாம் இங்கெ அறிவோம்!

சரியாக 2019-ஆம் ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கத் தொடங்கியது. காரணம், கொரோனா என்னும் புதிய வகை வைரஸ் தொற்று. கொஞ்சம் கொஞ்சமாக சீனா முழுக்க பரவிய இந்த தொற்று, நாளடைவில் தீவிரமானது. ஒருகட்டத்தில் பல்வேறு நாடுகளிலும் இதன் பரவல் அதிகரிக்க தொடங்கியது. உலகளவில் மிகத்தீவிர பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா, இந்தியாவில் முதன் முதலில் அறியப்பட்டது, மார்ச் 2020-ல்.

இந்தியாவில் கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர்தான், முதன்முதலில் ‘கடுமையான கொரோனா தனிமைப்படுத்தல்’ஐ எதிர்கொண்டார். அதன்பின் நடந்ததெல்லாம் கொடுமைதான். பணம் படைத்தவரில் தொடங்கி ஏழை பாமரர்கள்வரை அனைவரின் வாழ்க்கையிலும் எதிர்பாராத பாதிப்பினை ஏற்படுத்தும் கொடூர தொற்றுதாக உருவெடுத்தது கொரோனா.

2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய இந்த வைரஸ் தொற்றின் தாக்க அலைகள் முதல் அலை, இரண்டாம் அலை என்று அலை அலையாக மக்கள் மீது பாய்ந்தது. தற்போது 2024 ஆம் ஆண்டிலும் உருமாறி வந்து நிற்கிறது.

இதன்படி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஓமைக்ரான் என்று திரிபுகள் பல பெற்று தற்போது JN.1 என்ற திரிபில் வந்து நிற்கும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார, குடும்ப பிரச்னைகளையும் மனதளவிலான சிக்கல்களையும் வார்த்தைகளால் சொல்லிமாளாது.

தற்போது JN.1 திரிபு கொரோனா வைரஸ்தான் அதிகளவில் இருக்கிறது என்கின்றனர் வல்லுநர்கள். இந்த வகை கொரோனாவின் அறிகுறியாக காய்ச்சல், மூக்கடைப்பு, தொண்டை வலி, தலை வலி, மிகவும் சோர்வாக இருத்தல், பசியின்மை, எடைக்குறைவு போன்றவை உள்ளதாக உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“சர்வதேச அளவில் பாதிப்பு” - உலக சுகாதார நிறுவனம்

தற்போது சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் ஒருசில இடங்களில் தொற்று பரவல் வேகமாக உள்ளது. இருப்பினும் தற்போது பரவி வரும் ஜே.என்.1 வகை கொரோனா தொற்றை முன்புள்ள கொரோனா தொற்றை காட்டிலும் எளிதில் பரவக் கூடிய ஒன்றாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் முதலில் பரவியதாக கூறப்பட்ட இந்தவகை கொரோனா தொற்று உலகளவில் அமெரிக்கா, டென்மார்க் வரை அதிகரித்தே இருக்கின்றதாம். இதனால் சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் “கொரோனா தற்போது உலகளாவிய பெருந்தொற்று இல்லை என்றாலும், இப்போதும் அது பரவுகிறது, பல திரிபுகளாக உருமாறுகிறது, உயிரை கொல்கிறது. டிசம்பர் மாதத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நவம்பரோடு ஒப்பிடுகையில் 42% அளவும், ஐசியூ-வில் அனுமதிக்கப்பட வேண்டிய நோயாளிகள் எண்ணிக்கை 62% (நவம்பரோடு ஒப்பிடுகையில்) எனவும் டிசம்பரில் அதிகரித்துள்ளது. டிசம்பரில் மட்டும் சுமார் 10,000 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதும்கூட” என தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

இத்தோடு மேலும் புதிய வகை கொரோனா திரிபொன்று பரவுவதாகவும், அதற்கு பி.ஏ.2.86 எனப் பெயர் வைக்கப்பட்டு அதன் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்திய அளவில் பி.ஏ.2.86 பரவல் இருப்பதாக தெரியவில்லை. இதனால் தற்போதைக்கு இங்கு அதிகமுள்ள JN.1 வைரஸை கட்டுப்படுத்தவே அந்தந்த மாநில சுகாதாரத்துறைகள் ஆலோசனைகளை வெளியிட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகிறது.

இதில் ‘60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இதயம்,சிறுநீரகம் பாதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்கள் , சளி காய்ச்சலால் அவதிப்படுவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்’ என்று கர்நாடகா மாநில அரசு தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து சண்டிகரிலும் கட்டாய முகக்கவசம் உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

மேலும் இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள கடிதத்தில், “மாநில அரசுகள் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும். மேலும் மாநிலங்கள்வாரியாக வைரஸ் பரவல் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டு, பதிவேற்றப்பட்டு, முகாம்கள் நடத்தி கண்காணிக்க வேண்டும்” என்று அறிவிறுத்தியுள்ளது.

என்ன சொல்கிறர் அமைச்சர் மா.சுப்பிரமணியன்?

தமிழ்நாட்டினை பொறுத்தவரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் தெரித்த தகவலின் அடிப்படையில் பார்த்தால், “தமிழகத்தில் 20, 30 என்கிற எண்ணிகையில் கொரோனா தொற்று அன்றாடம் உள்ளது.

மா. சுப்பிரமணியன்

இந்த JN1 பாதிப்பு என்பது சர்வதேச அளவில் இருக்கிறது. ஐரோப்பாவில் நோய் தொற்று கணக்கெடுக்கும் பணிகளை விட்டுவிட்டனர். ஆனால் தமிழ்நாட்டில்தான் அவை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும் சிங்கப்பூரிலும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அங்கு 5 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவை பொறுத்தவரை கூடுதல் தடுப்பூசிகள் போடுவதற்கு அவசியம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆகவே அச்சப்பட வேண்டாம்” என்றுள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் வேதனை!

“டிசம்பர் 2023-ல் மட்டும் கொரோனாவால் உலகளவில் சுமார் 10,000 பேர் இறந்துள்ளனர்; கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலத்தோடு ஒப்பிடுகையில் இது குறைவான எண்ணிக்கைதான் என்றாலும், உயிரிழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்கூட்டியே தடுக்கப்பட்டிருக்க வேண்டியவை இந்த இறப்புகள்.

சில இடங்களில் கொரோனா நோயாளிகள் அதிகரித்துவருகிறது; ஆனால் அவை பதிவுசெய்யப்படுவதில்லை. கடந்த மாதம் விடுமுறையையொட்டி பலர் அதிகம் ஒன்றுகூடியதால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது; அரசாங்கங்கள் கொரோனா பரவல், சிகிச்சை, தடுப்பூசி ஆகியவற்றில் இன்னும் கவனம் செலுத்தவேண்டும்”

- என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.