பன்றியின் உடல் உறுப்பை பெற்று நீண்ட நாட்கள் நலமுடன் வாழும் பெண் எக்ஸ் தளம்
ஹெல்த்

பன்றியின் உடல் உறுப்பை பெற்று நீண்ட நாட்கள் நலமுடன் வாழும் பெண்.. மகிழ்ச்சியில் மருத்துவக்குழு!

அமெரிக்காவில் பன்றியின் உடல் உறுப்பை பெற்று நீண்ட நாட்கள் நலமுடன் வாழ்ந்து வருகிறார் ஒரு பெண். இதையடுத்து மருத்துவக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஜெ.நிவேதா

அமெரிக்காவின் அலபாமாவை சேர்ந்த டொவானா என்ற பெண்ணொருவர், இரு மாதங்களுக்கு முன்னர் ‘மனித உடலுக்கு ஏற்றவகையில் மரபணு மாற்றப்பட்ட’ பன்றி உறுப்புகளை ‘உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை’ மூலம் பெற்றிருக்கிறார். அந்த சிகிச்சையில் சிறுநீரகம் பெற்ற அவர், தற்போது நலமுடன் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ‘பன்றியின் உடல் உறுப்புடன், நீண்ட நாட்கள் வாழும் நபர்’ என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

பன்றியின் உடல் உறுப்பை பெற்று நீண்ட நாட்கள் நலமுடன் வாழும் பெண்

கடந்த 1999-ம் ஆண்டு, பிரசவ நேரத்தில் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி உள்ளார் அல்பாவை சேர்ந்த டொவானா என்ற 53 வயது பெண். இவருக்கு சக மனிதர்களின் சிறுநீரகம் பொருந்திப்போகவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் சுமார் 8 ஆண்டுகள் இவர் டயாலிஸிஸ் மூலம் உயிருடன் இருந்துவந்துள்ளார்.

இதற்கிடையே மற்றொரு மனிதரின் சிறுநீரகத்தை பெற முடியாத அளவுக்கு அசாதாரணமான ஆன்டிபாடிகளை இவரது உடல் உருவாக்கி இருக்கிறது. அதனால் வேறு வழியே இன்றி பன்றியின் சிறுநீரகத்தை மரபணு மாறுதல்களுடன் பெற்றுள்ளார்.

(சக மனிதர்களின் உடலுறுப்புகள் ஒருவருக்கு பொருந்திப்போகாமல் போகும்பொழுது, பன்றிகளின் உறுப்புகளில் மரபணு மாற்றம் செய்து அதை மனிதர்களுக்கு பொருத்துவதே இந்த சிகிச்சையின் வழிமுறை. உலகளவில் நிகழும் உடல் உறுப்பு தான பற்றாக்குறையை தீர்க்க, இதுபோன்ற நவீன அறுவை சிகிச்சைகள் உதவும் என பெரிதும் நம்பப்படுகிறது. எனினும் தற்போது இது ஆய்வு அளவிலேயே உள்ளது)
பன்றியின் உடல் உறுப்பை பெற்று நீண்ட நாட்கள் நலமுடன் வாழும் பெண்

சிகிச்சை முடிந்து 11 நாட்களில் வீடுதிரும்பியபோதும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பிலேயே இருந்துள்ளார் அவர். இன்றுடன் (ஜன 27) அவருக்கு சிகிச்சை முடிந்து 61 நாட்கள் ஆகியுள்ளன; இதன்மூலம்தான் ‘மரபணு மாற்றப்பட்ட பன்றி உறுப்புடன் நீண்ட நாட்கள் வாழ்ந்த நபர்’ என்ற பெருமையை டொவானா பெற்றுள்ளார். இதற்கு முன் அமெரிக்காவில் 4 பேருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றி உறுப்புகள் பொறுத்தப்பட்டிருந்தன. ஆனால் எதிர்பாராவிதமாக அவர்கள் யாரும் நீண்ட நாட்கள் வாழவில்லை.

இதுகுறித்து டொவானா ‘The Associated Press’ என்ற ஊடகத்திடம் தெரிவிக்கையில், “நானொரு சூப்பர்வுமன்; இது என் வாழ்வின் புதிய அத்தியாயம்” என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

பன்றியின் உடல் உறுப்பை பெற்று நீண்ட நாட்கள் நலமுடன் வாழும் பெண்

இதுபற்றி டொவானாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ராபர்ட் கூறுகையில், “நீங்கள் ஒருவேளை இவரை எங்காவது சந்தித்தால்கூட, பன்றியின் செயல்படும் நிலையிலுள்ள உறுப்பை தன்னுள் கொண்டு இவர் நடக்கிறார் என்பதை உங்களால் யோசித்துக்கூட பார்க்க முடியாது. தற்போது இவரது சிறுநீரகம் ஆரோக்கியமாக உள்ளது. இன்னும் பல ஆண்டுகளுக்கு அது நன்றாக செயல்படும் என நம்புகிறோம்.

இவர் தற்போது நலமுடன் இருப்பது, விலங்கு-மனிதன் மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவ தேடலில் ஆய்வாளர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கிறது. அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சிறுநீரகத்துக்காக காத்திருக்கின்றனர். டொவோனாவின் இந்த வெற்றிப்பாதை, அவர்களுக்கும் உதவும்” என்றுள்ளார்.

தொடர்ந்து டொவானா மருத்துவ கண்காணிப்பிலேயே உள்ளார். அவரது சிறுநீரக செயல்பாடுகள், கண்காணிப்பிலேயே உள்ளன.