கடற்கரைக்கு சென்றுவிட்டு கடல் உணவுகளை சாப்பிடாமல் வருவதா? என்ற கேள்வி நம் அனைவருக்குமே தோன்றுமல்லவா? நாக்குக்கு ருசியான இரால், மீன்கள் மற்றும் நண்டு என ரகரகமான கடல் உணவுகளை ரசித்து சாப்பிடுவர் பலர். கடல் உணவுகளில் சுவை மட்டுமல்ல; ஆரோக்கியமும் அடங்கியிருக்கிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் கடல் உணவுகள் முக்கிய இடம் வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் பெரும்பாலானோர் கடல் உணவுகளை விரும்பி சாப்பிட்டாலும் எல்லாரலும் அவை விரும்பப்படுவதில்லை. அதற்கு காரணம், அதிலுள்ள சில ஒவ்வாமைகள்தான்.
கடல் உணவிலுள்ள நன்மைகள்
1. கடல் உணவுகளில் ஒமேகா 3 நிறைந்திருக்கிறது. இந்த ஒமேகா 3 ஆனது ரத்தத்திலுள்ள ட்ரைகிளைசரைடுகள் மற்றும் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இதனால் இதய பிரச்னைகள் ஏற்படும் அபாயமும் குறைகிறது. மேலும், ஒமேகா 3, முடி மற்றும் சருமத்திற்கு நல்லது.
2. கடல் உணவுகளில் நிறைந்திருக்கிற ஒமேகா - 3 கொழுப்பு அமிலமானது கண்களுக்கு நல்லது. இது கண்களில் மாகுலர் சிதைவு மற்றும் பார்வை இழப்பைத் தடுக்கிறது.
3. புரதச்சத்து நிறைந்தவை கடல் உணவுகள். இவை உடலுக்கு தேவையான புரதத்தை வழங்குவதுடன், உடலில் அதிக கலோரிகள் சேர்வதை தடுத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மற்ற இறைச்சி உணவுகள் சாப்பிடாதவர்களுக்கு ஒரு சிறந்த மாற்று கடல் உணவுகள்.
கடல் உணவிலுள்ள தீமைகள்
1. சிலருக்கு கடல் உணவுகள் நன்மை பயத்தாலும் சிலருக்கு தீமையே பயக்கிறது. கடல் உணவுகள் சிலருக்கு அழற்சி ஏற்படுத்தி மிக மோசமான விளைவுகளை உருவாக்கும். இதனால் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்படவேண்டிய சூழல் உருவாகும்.
2. கடல்நீரானது கடுமையாக மாசுபட்டுள்ளது என்பது நம் அனைவரும் நன்கு அறிந்ததே. கடலிலிருந்து வரும் உணவுகளும் சிலநேரங்களில் அதனால் அதீத மாசுபட்டிருக்கும். இதுபோன்ற கடல் உணவுகளை உண்ணுவது உடலுக்கு நன்மை பயப்பதைவிட தீமையாக முடியும்.
3. கடல் உணவுகளில் தேவை அதிகரித்திருப்பதை அடுத்து, இப்போது அவை பண்ணைகளிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அப்படி பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் கடல் உணவுகளில் கெமிக்கல்களும் சேர்க்கப்படுகின்றன. அவற்றை உண்ணும்போது உடல்நல குறைபாடுகளே அதிகம் ஏற்படும்.