இளம்வயது கருத்தரித்தல்
இளம்வயது கருத்தரித்தல் முகநூல்
ஹெல்த்

ரத்த போக்கு to அனீமியா நோய்.. இளம்வயது கருத்தரித்தலில் இவ்வளவு பிரச்னையா? - டாக்டர் அருணா விளக்கம்

ஜெனிட்டா ரோஸ்லின்

உலக அளவில் பல துறைகளில் பெண்கள் கால்பதித்து வருவதன் மூலம் பழமையானவை மாறுகிறது என்றாலும் 18 வயது கூட நிரம்பாமல் நடைபெறும் குழந்தை திருமணங்கள் சில இடங்களில் மாற்றம் ஏற்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

குழந்தை திருமண தடை சட்டம்

18 வயது நிரம்பாத பெண்ணிற்கோ அல்லது 21 வயது நிரம்பாத ஆணிற்கோ திருமணம் செய்து வைப்பது என்பது குழந்தை திருமண தடை சட்டம் ஆகும்.

குழந்தை திருமண தடை சட்டம்

இதில் பெற்றோர்கள் மீது வழக்குகள் பதியப்படும் நிலையில் 18 வயது நிரம்பாத பெண்ணை திருமணம் செய்யும் நபரை போக்சோவில் கைது செய்யும் அளவிற்கு சட்டங்களும் இருக்கிறது.

சமூக நலத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி,மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் அதனை தாண்டியும் இப்படிபட்ட சம்பவங்கள் நடந்தால் அதை புகார் அளிக்கும் நபரின் விவரமானது ரகசியமாக காக்கப்பட்டும் வருகின்றது.

சமீபத்தில் கோவையை பொறுத்தவரை 2020ல் 58 புகார்களும் , 2021 ல் 146 புகார்களும், 2022 ல் 109 புகார்களும் குழந்தை திருமணங்கள் இன்றளவும் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு சான்றுகளாகும்.

இத்திருமணங்கள் திருமணம் என்ற ஒன்றோடு நின்று விடுவதில்லை. அதன் பிறகு உடலளவிலும் மனதளவிலும் ஆண், பெண் என இருவரையும் பாதிக்கும் வண்ணம் அமைகிறது.

பெண்களை பொறுத்தவரை இளம் வயதில் கருத்தரித்தல் என்பது இதனால் ஏற்படும் பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகின்றது. இவை பிரசவ காலத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது.

இளம் வயதில் கருவுறுதலால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பது குறித்து செயற்கை கருத்தரித்தல் மருத்துவர் அருணா அசோக்கிடம் கேட்கப்பட்டது. இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

மருத்துவர் அருணா அசோக்

குழந்தை திருமணம்

  • ” குழந்தை திருமணம் என்பது 15-19 வயது வரை இருப்பவர்கள் செய்யும் திருமணம். பொதுவாக 21 வயதிற்கு மேலே இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது என்பதுதான் நல்லது.

  • 18 வயது நிரம்பாமல் பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் முழுமை அடைவதில்லை. எனவே பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

  • குழந்தை திருமணம் வேண்டாம் என்று அனைவரும் எதிர்ப்புதற்கு முக்கிய காரணம்.

மனதளவில் பாதிப்பு

  • பெண்கள் மனதளவில் போதுமான பக்குவம் அடைவதில்லை.

  • பருவமடைதல் என்பது பொதுவாக 11 வயது சிலசமயம் 9 வயதில் கூட நடந்து விடுகின்றது. ஆனால் ஒரு பெண் மனதளவில் முதிர்ச்சி அடைந்து தன்னையும் பிறரையும் அறிந்து கொள்ள 21 வயது என்பது மிகவும் அவசியமாகின்றது.

  • ஆனால் இதற்கு அப்பாற்பட்டு மனதளவில் பக்குவம் இருக்கிறது, பெற்றோர் தரப்பிலும் ஆதரவு இருக்கிறது என்று கூறினாலும் உடல் ரீதியாகவும் பக்குவம் என்பதும் மிகவும் அவசியம்.

  • 18 வயதிற்கு குறைவானவர்கள் திருமணம் செய்து குழந்தை பிறப்பு என்பது ஏற்பட்டால் கணவன், மனைவிக்கு கிடையேயான உறவினை சரியாக கையாள முடியாது, அதற்கான போதுமான பக்குவம் என்பது இருக்காது. குழந்தை பிறப்பிலும் அதிக அளவு பாதிப்பு என்பது ஏற்படும்.

உடலளவில் பாதிப்பு:

  • இளம் வயது கருத்தலின் போது ஏற்படும் ரத்த அழுத்தமானது வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.

  • மேலும் அனீமியா போன்ற நோய் ஏற்பட காரணமாக அமைகிறது. கர்ப்பக் காலத்தில் உயிர்கொல்லி நோயாக கருதப்படுவது என்பது அனீமியாதான். எனவே இவர்களுக்கு சரியான ஊட்டசத்தும் இருப்பதில்லை. இவ்வகையான உணவுகளை உட்கொள்ளலாம் என்று போதுமான அளவு விழிப்புணர்வும் இவர்களுக்கு இருப்பதில்லை.

  • மேலும் குறைமாதத்தில் குழந்தை பிறக்கும் நிலையும் ஏற்படுகிறது.

  • குழந்தை பிறப்பின் போது ஏற்படும் ரத்த போக்கு அதிகரிக்கிறது. எனவே 21 வயதிற்கு பிறகு திருமணம் செய்து கொள்வது என்பது சிறந்தது.

  • இவ்வயதில் கல்வி என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. கல்வியின் மூலம் பெறப்படும் அறிவும், தாயின் மூலம் கற்கப்படும் விஷயங்களும் அறிந்த பிறகுதான் குழந்தையை நன்றாக வளர்ப்பதற்கு தேவையான விழிப்புணர்வும் கிடைக்கிறது.

  • அதேசமயம் திருமணம் ஆகாமலே குழந்தை பேறு என்பதும் அதிகரிக்கிறது.இதை தடுக்க வேண்டும் என்றால் பாலியல் கல்வி என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.இதன் மூலமாக தனிபட்ட ரீதியாக ஏற்படும் பிரச்னைகளையும் கையாளும் பக்குவமும் கிடைக்கிறது.” என்று தெரிவித்தார்.